ஈரோடு இடைத்தேர்தல்: அதிமுக சார்பில் போட்டியிடும் தென்னரசுக்கு முழு ஆதரவு - அண்ணாமலை அறிவிப்பு

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், இபிஎஸ் தரப்பு வேட்பாளர் தென்னரசுவுக்கு பாஜக ஆதரவு அளிப்பதாக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.
ஈரோடு இடைத்தேர்தல்: அதிமுக சார்பில் போட்டியிடும் தென்னரசுக்கு முழு ஆதரவு - அண்ணாமலை அறிவிப்பு
Published on

சென்னை,

பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-

தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில், ஈரோடு-கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில், அதிமுக வேட்பாளராக இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் கே.எஸ்.தென்னரசுவிற்கு பாரதிய ஜனதா கட்சி தனது முழு ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறது.

தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பாக, சட்டப்பூர்வ அதிமுக வேட்பாளரை முன்னிறுத்தி இருக்கும், இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி , பொதுநலன் கருதி, கூட்டணியின் நன்மை கருதி, தங்களது வேட்பாளரை வாபஸ் பெற்றிருக்கும் ஓ.பன்னீர்செல்வத்திற்கும் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

ஆளும் கட்சியின் அராஜகங்களை, ஊழல்களை அத்துமீறல்களை, மக்கள் விரோத போக்கை, கொடுத்த வாக்கில் எதையும் நிறைவேற்ற முடியாமல், திணறிக் கொண்டிருக்கும் திறனற்ற திமுக அரசை, வீழ்த்துவதற்காக ஓரணியில் திரண்டிருக்கும், நாம் அனைவரும், அதிமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளர் கே.எஸ்.தென்னரசுவின் வெற்றிக்கு பாடுபட வேண்டும்.

குறிப்பாக, பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்களும், நிர்வாகிகளும், தொண்டர்களும், கூட்டணியின் வெற்றிக்காக கடுமையாக பாடுபட வேண்டும். இந்த இடைத்தேர்தல் வெற்றி வருங்கால தேர்தல் வெற்றிகளுக்கு வரவேற்பு கூறும் வண்ணம் அமைக்க, கண்ணுறக்கம் இல்லாமல் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும்.

ஆட்சியின் பலம், அதிகாரத்தின் பலம், அளவின்றி குவித்திருக்கும் பணபலம், என்று எத்தனை பலத்துடன் நம் எதிரி வந்தாலும், மக்கள் பலத்துடன், நாம் மனதார உழைக்க வேண்டும், என்று பாஜக சொந்தங்கள் அனைவரையும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வெற்றி வேட்பாளராகக் களம் காணும் கே.எஸ்.தென்னரசுவிற்கு நல்வாழ்த்துக்களையும், பாஜகவின் நல்லாதரவையும், தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com