ஈரோடு இடைத்தேர்தல்: பள்ளிக்கூடங்களில் உள்ள ஓவியங்களை அழிக்க உத்தரவு

ஈரோடு இடைத்தேர்தலை முன்னிட்டு பள்ளிக்கூடங்களில் உள்ள ஓவியங்களை அழிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
ஈரோடு இடைத்தேர்தல்: பள்ளிக்கூடங்களில் உள்ள ஓவியங்களை அழிக்க உத்தரவு
Published on

ஈரோடு,

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வருகிற 5-ந் தேதி நடக்கிறது. இதை முன்னிட்டு வாக்குச்சாவடிகள் தயார் செய்யும் பணி ஓரிரு நாளில் தொடங்கப்பட உள்ளது. 237 வாக்குச்சாவடிகளிலும் நிழற்பந்தல் அமைக்கும் பணி, சாய்வு தளம் மற்றும் அனைத்து வசதிகளும் செய்யப்பட உள்ளன. இதற்காக வாக்குச்சாவடிகளாக இயங்க உள்ள பள்ளிக்கூடங்களில் தேர்தல் பிரிவு அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள்.

வாக்குச்சாவடி மையங்களாக அரசு பள்ளிக்கூடங்கள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள், விளையாட்டு மைதானம் ஆகியவை உள்ளன. இதில் அங்கன்வாடிகள் மற்றும் அரசு பள்ளிக்கூடங்களில் அங்கு பணியாற்றும் ஆசிரிய-ஆசிரியைகள் தங்கள் சொந்த செலவில் பல்வேறு ஓவியங்களை வரைந்து வைத்துள்ளனர். குறிப்பாக குழந்தைகளின் மனதில் பதியும் வகையில் தமிழர்களின் ஐவகை நிலங்கள், தேசத்தலைவர்கள், புலவர்கள், விஞ்ஞானிகள் என ஓவியங்கள் உள்ளன.

இந்தநிலையில் தேர்தல் நடப்பதால் இந்த ஓவியங்களை அழிக்க வேண்டும் என அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது ஆசிரியர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து ஆசிரியர் ஒருவர் கூறும்போது, 'ஒவ்வொரு முறை தேர்தலின் போதும் இதுபோன்ற பிரச்சினை உள்ளது. எனவே அரசியல் தலைவர்களின் ஓவியங்களை பெரும்பாலும் பள்ளிக்கூட வளாகம் மற்றும் வகுப்பறைகளில் வைப்பதில்லை. தேசிய மலர் தாமரை, தமிழ்நாட்டின் மாநில பழம் மாங்கனி என பாடத்தில் உள்ள விவரங்கள் கூட வகுப்பறையில் வைக்க முடியாத நிலை உள்ளது.

எனவே அரசியல் சாராத புலவர்கள், தலைவர்களின் படங்கள், பூ, பழங்கள், விலங்குகள் படங்களை வைக்கிறோம். தற்போது ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்காக இந்த படங்களையும் அழிக்க வேண்டும் என்று அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். திருவள்ளுவர், பாரதியார் படங்களை கூட மறைக்கச்சொல்கிறார்கள்' என்றார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com