ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: வாக்குப்பதிவு 6.72 சதவீதம் குறைந்துள்ளது

ஈரோடு இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை மறுநாள் நடைபெறுகிறது.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: வாக்குப்பதிவு 6.72 சதவீதம் குறைந்துள்ளது
Published on

ஈரோடு,

காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் எம்.எல்.ஏ. மரணம் அடைந்ததால் 2-வது முறையாக ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு நேற்று இடைத்தேர்தல் நடந்தது. 237 வாக்குச்சாவடிகளிலும் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.

46 வேட்பாளர்கள் போட்டியிட்டதால், ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் 3 எந்திரங்கள் வைக்கப்பட்டு இருந்தன. காலை நேரத்தில் வாக்குச்சாவடிகளுக்கு குறைந்த அளவிலான வாக்காளர்களே வந்தனர்.

காலையில் நடைபயிற்சி சென்றவர்கள் அப்படியே வாக்குச்சாவடிகளுக்கு வந்து ஜனநாயக கடமையாற்றிவிட்டு சென்றனர். ஒரு சில வாக்குச்சாவடிகளில் மட்டுமே வாக்காளர்கள் காத்திருந்து ஓட்டுப்போட்டனர். பெரும்பாலான வாக்குச்சாவடிகளில் எந்த தாமதமும் இன்றி வந்த உடன் தங்கள் வாக்கை பதிவு செய்து சென்றனர். இதனால் மந்தமான நிலை காணப்பட்டது.

மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவுபெற்றது. 6 மணிக்குள் வாக்குச்சாவடி மைய வளாகத்துக்குள் வந்த வாக்காளர்களுக்கு மட்டும் ஓட்டு போடுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டது. மேலும், சரியாக 6 மணிக்கு அனைத்து வாக்குச்சாவடிகளின் நுழைவு கதவுகளும் மூடப்பட்டன. யாருக்கும் டோக்கன் வழங்கப்படவில்லை. இறுதியில் 67.97 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்தநிலையில் நேற்று நடந்த ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் 2023-ம் ஆண்டு நடைபெற்ற இடைத்தேர்தலுடன் ஒப்பிடும்போது 6.72 சதவீத வாக்குகள் குறைந்துள்ளதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

2023 ஆம் ஆண்டில், இந்தத் தொகுதியில் 74.69 சதவீத வாக்குகள் பதிவானது. அங்கு காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் 66,233 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. ஈரோடு இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை மறுநாள் (சனிக்கிழமை) நடைபெறுகிறது. அன்று காலை 11 மணி முதல் முன்னணி நிலவரம் தெரியவரும்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com