ஈரோடு: பட்டாசு வெடித்து இளைஞர் படுகாயம்

காமராஜ் தனது வீட்டின் மாடியில் ஏகப்பட்ட பட்டாசுகளை கொண்டு வந்து சேமித்து வைத்திருந்ததாக கூறப்படுகிறது.
ஈரோடு: பட்டாசு வெடித்து இளைஞர் படுகாயம்
சூர்யா
Published on

ஈரோடு,

ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே வீட்டின் மாடியில் சேமித்து வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியதில், வீடு சேதமடைந்து வாலிபர் ஒருவர் படுகாயமடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திடீர் வெடி விபத்து

ஈரோடு மாவட்டம் சித்தோடு அடுத்த நசியனூர் பகுதியை சேர்ந்தவர் காமராஜ். இவர் அந்த பகுதியில் உரிமம் பெற்ற பட்டாசு கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில், காமராஜ் தனது வீட்டின் மாடியில் ஏகப்பட்ட பட்டாசுகளை கொண்டு வந்து சேமித்து வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இன்று மாடியில் வைக்கப்பட்டிருந்த இந்த பட்டாசுகள் அனைத்தும் எதிர்பாராதவிதமாக திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறின.

ஜன்னல்கள் நொறுங்கின

வெடி விபத்தின் தாக்கம் பயங்கரமாக இருந்ததால், அந்த வீட்டின் ஜன்னல் கண்ணாடிகள் அனைத்தும் சுக்குநூறாக நொறுங்கி விழுந்தன. மேலும் கட்டிடத்தின் சுவர்களும் பலத்த சேதமடைந்தன. இந்த விபத்தின் போது, வீட்டில் இருந்த காமராஜின் மகன் சூர்யா (வயது 30) என்ற வாலிபர் பலத்த காயமடைந்தார். பயங்கர சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், ரத்த வெள்ளத்தில் கிடந்த சூர்யாவை மீட்டு சிகிச்சைக்காக உடனடியாக அங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கலெக்டர் ஆய்வு

விபத்து குறித்து தகவல் அறிந்ததும் ஈரோடு மாவட்ட கலெக்டர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் விரைந்து சென்று தீவிர ஆய்வு நடத்தினர். இந்த வெடிவிபத்து தொடர்பாக சித்தோடு போலீஸார் வழக்குப்பதிவு செய்து, தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com