ஈரோடு: போலீசார் மீது வடமாநில தொழிலாளர்கள் சரமாரி தாக்குதல் - இன்ஸ்பெக்டர் உட்பட 7 பேர் படுகாயம்...!

ஈரோடு அருகே வடமாநில தொழிலாளர்கள் தாக்கியதில் இன்ஸ்பெக்டர் உட்பட 7 போலீசார் படுகாயம் அடைந்து உள்ளனர்.
ஈரோடு: போலீசார் மீது வடமாநில தொழிலாளர்கள் சரமாரி தாக்குதல் - இன்ஸ்பெக்டர் உட்பட 7 பேர் படுகாயம்...!
Published on

மொடக்குறிச்சி,

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகே உள்ள நஞ்சை ஊத்துக்குளியில் எஸ்.கே. எம் பூர்ணா ஆயில் ஆலை செயல்பட்டு வருகிறது. இங்கு ஆயிரக்கணக்கான வடமாநில தொழிலாளர்கள் தங்கி பணிபுரிந்து வருகின்றனர்.

இந்நிலையில் பீகார் சேர்ந்த கமோத்ராம் என்பவர் இரவு வேலை செய்து வந்தார். அப்போது பொருட்களை ஏற்றிச் செல்வதற்காக தனியார் டேங்கர் லாரி வந்தது. எதிர்பாராத விதமாக லாரியின் பின் சக்கரத்தில் மோதி விபத்து ஏற்பட்டதில் கமோத்ராம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனையடுத்து ஆம்புலன்ஸ் மூலம் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஆலை நிர்வாகத்தினர் முயன்றனர். அப்போது அங்கு வந்த 400-க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்த மொடக்குறிச்சி இன்ஸ்பெக்டர் தீபா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் வடமாநில தொழிலாளர்கள் பிரேதத்தை எடுக்க விடாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதனைத் தொடர்ந்து சுமார் நூற்றுக்கணக்கான வடமாநில தொழிலாளர்கள் கையில் உருட்டு கட்டை மற்றும் கற்களை எறிந்து திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர்.

இதில் நிறுவனத்தின் முன்புள்ள செக்யூரிட்டி அறை அடித்து நொறுக்கப்பட்டது. அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த மொடக்குறிச்சி இன்ஸ்பெக்டர் தீபா, எஸ்.ஐ., பழனிச்சாமி, போலீசார்கள் பிரகாஷ், கார்த்தி உள்ளிட்ட 7 பேர் காயம் அடைந்தனர். அவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அதனைத் தொடர்ந்து எஸ்பி., உத்தரவின் பேரில் ஏடிஎஸ்பி.,க்கள் ஜானகிராமன், பாலாஜி ஏஎஸ்பி., கௌதம்கோயல் மற்றும் இன்ஸ்பெக்டர்கள் என 200-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர்.

தொடர்ந்து பிரேதத்தை ஆம்புலன்ஸ் மூலம் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல எடுத்துச் சென்றபோது பிரேதத்தை எடுக்க விடாமல் வடமாநில தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதனைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட வட மாநிலத் தொழிலாளர்களை போலீசார் வாகனங்களில் ஏற்றி விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். வடமாநில தொழிலாளர்கள் நடத்திய கலவரத்தில் பாதுகாப்பு பணிக்காக வந்திருந்த மூன்று போலீஸ் வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து மொடக்குறிச்சி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் கலவரத்தில் ஈடுபட்ட 40 வடமாநில தொழிலாளர்களை போலீசார் கைது செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com