ஈரோடு: ஓடும் ரெயிலில் இறங்க முயன்று நடைமேடைக்கு இடையே சிக்கிய பயணி

துரிதமாக செயல்பட்டு பயணியை காப்பாற்றிய ரெயில்வே பாதுகாப்பு படை வீரருக்கு பாராட்டு குவிகிறது.
ஈரோடு,
கோவையில் இருந்து சென்னைக்கு சென்ற இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று காலை ஈரோடு ரெயில் நிலையத்தின் முதலாவது நடைமேடையில் வந்து கொண்டு இருந்தது. அப்போது பயணி ஒருவர் மெதுவாக வந்து கொண்டிருந்த ரெயிலில் இருந்து, டீ வாங்குவதற்காக கீழே இறங்க முயன்றார்.
இதில் எதிர்பாராதவிதமாக ரெயிலுக்கும், நடைமேடைக்கும் இடையே அவர் தவறி விழுந்தார். ரெயிலின் படிக்கட்டு கம்பியை இறுக்கமாக பிடித்து கொண்டதால், நடைமேடையிலேயே இழுத்து செல்லப்பட்டார்.
அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த ரெயில்வே பாதுகாப்பு படை வீரர் அப்துல் ரபிக் துரிதமாக செயல்பட்டு அந்த பயணியை பிடித்து இழுத்து நடைமேடைக்கு கொண்டு வந்தார். அவர் விரைந்து செயல்பட்டதால் அந்த பயணி மீட்கப்பட்டார்.
இந்த சம்பவம் தொடர்பான கண்காணிப்பு கேமரா வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. மேலும், துரிதமாக செயல்பட்ட ரெயில்வே பாதுகாப்பு படை வீரர் அப்துல் ரபிக்கை ரெயில்வே பாதுகாப்பு படை அதிகாரிகள் பாராட்டினர்.






