ஈரோடு: சத்தியமங்கலம் அருகே பட்டப்பகலில் ஊருக்குள் புகுந்த புலி - கிராம மக்கள் அச்சம்

வனத்துறையினர் சத்தம் எழுப்பியும் பட்டாசுகளை வெடித்தும், நீண்ட போராட்டத்திற்குப் பிறகு புலியை மீண்டும் பாதுகாப்பாக வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர்.
ஈரோடு: சத்தியமங்கலம் அருகே பட்டப்பகலில் ஊருக்குள் புகுந்த புலி - கிராம மக்கள் அச்சம்
புலி
Published on: 

ஈரோடு,

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் பவானிசாகர் வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமத்திற்குள் பட்டப்பகலில் புலி ஒன்று புகுந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் பயத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

தோட்டத்தில் புகுந்த புலி

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பவானிசாகர் வனச்சரக செம்மலை அடிவாரப் பகுதியில் புதுப்பீர்கடவு கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை, வனப்பகுதியில் இருந்து புலி ஒன்று வெளியேறி, கிராமத்தில் உள்ள ஒரு விவசாயத் தோட்டத்திற்குள் திடீரென நுழைந்தது.

வீடியோ எடுத்த பொதுமக்கள்

பட்டப்பகலில் மக்கள் நடமாட்டம் இருக்கும் போதே, தோட்டத்தில் புலி சாதாரணமாக உலா வருவதைக் கண்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அலறியடித்துக் கொண்டு நாலாபுறமும் ஓடினர். பின்னர், பாதுகாப்பான தூரத்திலிருந்து சிலர் தங்களது மொபைல் போன்களில் புலியின் நடமாட்டத்தை வீடியோவாகப் பதிவு செய்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பரப்பரப்பை ஏற்படுத்தி வருகிறது.

வனத்துறை நடவடிக்கை

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பவானிசாகர் வனத்துறையினர், புலி நடமாட்டம் உள்ள பகுதியை தீவிரமாகக் கண்காணித்தனர். பின்னர், சத்தம் எழுப்பியும் பட்டாசுகளை வெடித்தும், நீண்ட போராட்டத்திற்குப் பிறகு புலியை மீண்டும் பாதுகாப்பாக வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர்.

கூண்டு வைக்க கோரிக்கை

இப்பகுதியில் தொடர்ந்து வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து வருவதால், பொதுமக்கள் மற்றும் கால்நடைகளின் பாதுகாப்பைக் கருதி, வனப்பகுதி எல்லையில் கண்காணிப்புக் கோபுரங்கள் அமைக்க வேண்டும் என்றும், அந்த புலியைப் பிடிக்க கூண்டு வைக்க வேண்டும் என்றும் கிராம மக்கள் வனத்துறைக்கு அவசரக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com