

ஈரோடு
ஈரோட்டில் மருத்துவ திட்டம் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிலாளர்கள் குடும்பத்துடன் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஈரோடு சென்னிமலை ரோட்டில் உள்ள அரசு போக்குவரத்துக்கழக அலுவலகம் முன்பு அரசு போக்குவரத்து கழக ஓய்வுபெற்றோர் நலச்சங்கம் சார்பில் (சி.ஐ.டி.யு.) நேற்று 2-வது நாளாக குடும்பத்துடன் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு மாவட்ட தலைவர் ஜெகநாதன் தலைமை தாங்கினார்.
போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கு அரசாணை அடிப்படையில் உடனடியாக மருத்துவ திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். இந்த போராட்டம் இன்று (வியாழக்கிழமை) மாலையுடன் நிறைவு பெறுவதாக ஓய்வு பெற்ற போக்குவரத்து கழக தொழிலாளர்கள் தெரிவித்தனர்.