ஈரோடு: காணாமல் போன 2 மாணவர்கள் 10 மணி நேரத்தில் மீட்பு

செல்போன் சிக்னலை கண்காணித்தபோது மாணவர்கள் தஞ்சாவூரில் இருப்பது தெரிய வந்தது.

ஈரோடு:  காணாமல் போன 2 மாணவர்கள் 10 மணி நேரத்தில் மீட்பு
Published on: 

பவானி

ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே காணாமல் போன 2 மாணவர்களை 10 மணி நேரத்தில் போலீசார் மீட்டனர்.

ஈரோடு மாவட்டம் சித்தோடு குமலாம்பரப்பு பகுதியை சேர்ந்த 14 வயதுடைய 2 சிறுவர்கள், நசியனூர் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் பள்ளி முடிந்ததும் ராயபாளையம் புதூரில் உள்ள டியூசனுக்கு செல்வதாக வீட்டில் இருப்பவர்களிடம் கூறிவிட்டு இருவரும் வீட்டைவிட்டு சென்றனர்.

ஆனால் இரவு வெகு நேரமாகியும் மாணவர்கள் 2 பேரும் வீடுகளுக்கு வரவில்லை. இதனால் பதறிப்போன பெற்றோர் சிறுவர்களை அக்கம்பக்கத்தில் தேடி பார்த்தனர். ஆனால் கிடைக்கவில்லை. மேலும் உறவினர்கள், நண்பர்கள் வீடுகளுக்கும் சென்று பார்த்தனர். மாணவர்கள் அங்கு செல்லவில்லை என்பதும் தெரியவந்தது.

மீட்பு

இதைத்தொடர்ந்து மாணவர்களின் பெற்றோர் சித்தோடு போலீசில் நேற்று காலை புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை முடுக்கி விட்டனர். மேலும் மாணவர்களின் செல்போன் சிக்னலை கண்காணித்தனர். அப்போது மாணவர்களின் செல்போன் சிக்னல் தஞ்சாவூரில் காட்டியது.

இதனையடுத்து, தஞ்சாவூர் விரைந்து சென்ற போலீசார், மாணவர்கள் 2 பேரையும் மீட்டனர். புகார் கொடுத்த 10 மணி நேரத்தில் சிறுவர்களை விரைந்து கண்டுபிடித்த போலீசாருக்கு பெற்றோர் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர். மேலும் சிறப்பாக செயல்பட்ட போலீசாரை உயர் அதிகாரிகளும், பொதுமக்களும் வெகுவாக பாராட்டினர்.

போலீசார் விசாரணை

படிக்க விருப்பம் இல்லாததால் வீட்டைவிட்டு வெளியேறி வேலைக்காக தஞ்சாவூர் வந்ததாக நண்பர்களிடம் மாணவர்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஆனால் உண்மை என்ன? என்பது போலீசார் விசாரணையின் முடிவில்தான் தெரியவரும்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு பகுதியில், சமீபத்தில் இதேபோன்று நேற்று முன்தினம் பள்ளிக்கு சென்ற 3 சிறுமிகள் திடீரென்று காணவில்லை. வீட்டுக்கும் வரவில்லை. புகாரையடுத்து, தீவிர விசாரணை நடத்திய போலீசார், அவர்கள் 3 பேரையும் சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து நேற்று மீட்டனர்.

விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள ஆலம்பூண்டி கிராமத்தை சேர்ந்த வடிவேலு-பவானி தம்பதியினரின் 2-வது மகள் ஹேமலதா என்கிற ஹேமாவதி (வயது 7). இவள் கடந்த 11-ந்தேதி தன்னுடைய பிறந்த நாள் விழாவை கொண்டாடி விட்டு பெற்றோருடன் படுத்து தூங்கினாள். மறுநாள் அதிகாலை 5.30 மணியளவில் பெற்றோர் எழுந்து பார்த்தபோது ஹேமலதாவை காணவில்லை. பல்வேறு இடங்களில் பெற்றோர், உறவினர்கள் தேடிப்பார்த்தும் சிறுமி கிடைக்கவில்லை.

வழக்குப்பதிவு

இதுகுறித்து சிறுமியின் தாய் பவானி கொடுத்த புகாரின் பேரில் சத்தியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். சிறுமியை கண்டுபிடிக்க 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு பல்வேறு கோணங்களில் தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. எனினும், 18 நாட்களாக சிறுமியின் நிலை பற்றி தெரிய வரவில்லை. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com