

மேட்டூர்,
கர்நாடகம் மற்றும் கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதனால் கர்நாடகத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் உள்ளிட்ட முக்கிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்த அணைகள் முழு கொள்ளளவை எட்டிப்பிடிக்கும் நிலையில் உள்ளதால் இந்த அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. இந்த தண்ணீர் தமிழககர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவை கடந்து தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் வழியாக சேலம் மாவட்டம் மேட்டூர் அணையை வந்தடைகிறது.
இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இதனால் அணை நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து கொண்டே இருக்கிறது. கர்நாடக அணைகளில் இருந்து உபரிநீர் திறக்கப்பட்டதால் கடந்த 12ந்தேதி மேட்டூர் அணை நீர்மட்டம் 71.76 அடியாகவும், 13ந்தேதி 75.36 அடியாகவும், நேற்று 83.20 அடியாகவும் இருந்தது. இன்று அணை நீர்மட்டம் 87.92 அடியை நெருங்கியுள்ளது. அணைக்கு நீர்வரத்து 49,000 கன அடியில் இருந்து 60,120 கன அடியாக அதிகரித்துள்ளது.
கனமழை எதிரொலியால் நீலகிரி மற்றும் தேனி மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
1.15 லட்சம் கன அடி நீர் திறப்பு
தற்போது கர்நாடகாவில் உள்ள கே.ஆர்.எஸ் அணையிலிருந்து வினாடிக்கு 80,000 கன அடி தண்ணீரும், கபினி அணையிலிருந்து 35,000 கன அடி தண்ணீரும் தமிழகத்திற்கு திறக்கப்பட்டுள்ளது. இது கடந்த 5 ஆண்டுகளில் கர்நாடகாவால் தமிழகத்திற்கு திறந்து விடப்படும் அதிகபட்ச தண்ணீர் அளவாகும்.