அத்தியாவசிய சேவை: அனைத்து ரத்த வங்கிகளும் செயல்பட வேண்டும் - தமிழக அரசு உத்தரவு

அத்தியாவசிய சேவை என்பதால் அனைத்து ரத்த வங்கிகள், சேமிப்பு அலகுகள் செயல்பட வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அத்தியாவசிய சேவை: அனைத்து ரத்த வங்கிகளும் செயல்பட வேண்டும் - தமிழக அரசு உத்தரவு
Published on

சென்னை,

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் மற்றும் தமிழ்நாடு மாநில ரத்த பரிமாற்று குழுமம் இணைந்து 90 அரசு ரத்த வங்கிகளை நிர்வகித்து வருகிறது. இந்த 90 அரசு ரத்த வங்கிகள் மூலம் சுமார் 4 லட்சம் ரத்த அலகுகள், ஒவ்வொரு ஆண்டும் தன்னார்வ ரத்ததானம் செய்பவர்களிடமிருந்து சேகரிக்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் சராசரியாக சுமார் 33 ஆயிரம் ரத்த அலகுகள் ஒவ்வொரு மாதமும் தேவைப்படுகிறது. கொரோனா தொடர்பான விதிமுறைகள் காரணமாக, சாலை விபத்து, அவசரகால சிகிச்சைகள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட அறுவை சிகிச்சைகள் குறைந்து இருப்பதால் ரத்த அலகுகளின் தேவை குறைந்துள்ளது.

ஆனால் தலசீமியா நோயாளிகள், கர்ப்பிணி பெண்கள் மற்றும் ரத்த மாற்றம் தேவைப்படக்கூடிய மோசமான நோயாளிகளுக்கு ரத்த பரிமாற்றம் செய்ய ஒவ்வொரு ரத்த வங்கியும் வழக்கமான தேவையில் 25 சதவீதம் ரத்த அலகுகள் இருப்பு வைத்துக்கொள்ள வேண்டும்.

மத்திய அரசின் சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின், கொரோனாவின்போது அத்தியாவசிய சேவைகள் என்ற மேம்படுத்தப்பட்ட வழிகாட்டுதலில், ரத்த வங்கியின் சேவைகளை அத்தியாவசியமான சேவைகளில் ஒன்றாகக் குறிப்பிட்டதோடு, அனைத்து மாநிலங்களிலும் அனைத்து ரத்த வங்கிகள் மற்றும் ரத்த சேமிப்பு அலகுகள் செயல்பட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே ரத்த தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு இந்த காலகட்டத்தில் ரத்த சேமிப்பு மற்றும் தன்னார்வ ரத்த தானம் தொடர்பான நடவடிக்கைகள் நியாயமான முறையில் தொடரப்பட வேண்டியது அவசியம் என்பதை கருத்தில் கொண்டு, மாவட்ட கலெக்டர்களால் நடத்தப்பெறும் தன்னார்வ ரத்த தான முகாம்களில் பொதுமக்கள் அனைவரும் எப்போதும்போல் ரத்ததானம் செய்யலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com