

எட்டயபுரம்:
விளாத்திகுளம், எட்டயபுரம் மற்றும் முத்தையாபுரம் பகுதியில் வைக்கப்பட்டிருந்த 102 விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு வேம்பார் மற்றும் தூத்துக்குடி கடலில் கரைக்கப்பட்டன.
விநாயகர் சிலைகள் ஊர்வலம்
விளாத்திகுளம், எட்டயபுரம் பகுதியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்து முன்னணி உள்ளிட்ட பல்வேறு இந்து அமைப்புகள் சார்பில் பல்வேறு இடங்களில் 82 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு இருந்தன. இந்த சிலைகளுக்கு தினமும் பூஜைகள், தீபாராதனை காட்டப்பட்டு வந்தது.
எட்டயபுரத்தில் வைக்கப்பட்டிருந்த சிலைகள் நேற்று முன்தினம் மாலையில் வாகனங்களில் ஏற்றப்பட்டு, முக்கிய வீதிகள் வழியாக போலீஸ் பாதுகாப்புடன் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டன. இந்த ஊர்வலம் விளாத்திகுளம் சென்றடைந்தது. அங்கு வைக்கப்பட்டு இருந்த சிலைகளும் வாகனங்களில் ஏற்றப்பட்டு ஊர்வலமாக வேம்பார் கடற்கரைக்கு கொண்டு செல்லப்பட்டன.
வேம்பார் கடற்கரையில் சிலைகள் வைக்கப்பட்டு, தேங்காய் உடைத்து, கற்பூரம் ஏற்றி வழிபாடு நடத்தப்பட்டது. பின்னர், மேளதாளத்துடன் அனைத்து விநாயகர் சிலைகளையும் கடலில் கரைத்தனர்.
விநாயகர் சிலை கரைப்பின் போது, வேம்பார் கடற்கரையில் விளாத்திகுளம் போலீஸ் துணை சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். மேலும் தீயணைப்பு வீரர்கள் மற்றும் கடலோர பாதுகாப்பு படை வீரர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
முத்தையாபுரம்
இதேபோன்று தூத்துக்குடி முத்தையாபுரம் இந்து முன்னனி சார்பாக முத்தையாபுரம் அய்யன்கோவில் தெரு, பொன்னான்டி நகர், வரதவிநாயகர் கோவில் தெரு, அம்மன் கோவில் தெரு, ஆனந்தநகர், கிருஷ்ணா நகர், சுந்தர்நகர், ஜெஎஸ் நகர், சுபாஷ் நகர், நேருஜீ நகர், ராஜீவ் நகர், சாந்திநகர், அத்திமரப்பட்டி, முள்ளக்காடு நேருஜி நகர், தோப்புதெரு, பாரதிநகர் பகுதியில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு இருந்தன. இந்த சிலைகளுக்கு தினமும் வழிபாடு நடத்தப்பட்டு வந்தது. நேற்று முன்தினம் மாலையில் 20 விநாயகர் சிலைகள் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் ஏற்றப்பட்டு முத்தையாபுரம் பஜாருக்கு கொண்டு செல்லப்பட்டன. அங்கு விநாயகர் சிலைகளுக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது.
தூத்துக்குடி கடலில் கரைப்பு
பின்னர் சிலைகள் ஊர்வலமாக தங்கமாள்புரம், சூசைநகர், சுனாமிகாலனி வழியாக தூத்துக்குடி துறைமுக விருந்தினர் மாளிகை பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டன. அங்கு சிலைகள் கடலில் கரைக்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் இந்து முன்னணி மாநகர பொதுச் செயலாளர் நாராயணராஜ், மாநில துணைத்தலைவர் நாகராஜன், மாவட்ட பொது செயலாளர் உமரி சத்தியசீலன் மற்றும் பா.ஜ.க., இந்து முன்னணி நிர்வாகிகள் கலந்து கொண்டன். முத்தையாபுரம் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
-