ஒரு மாவட்ட ஆட்சியருக்கே இந்தத் தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை.. - கனிமொழி எம்.பி.

யாரையாவது காப்பாற்ற நினைத்தால், நிச்சயமாகத் திமுக இதை மிகப் பெரிய அளவில் கையில் எடுக்கும் என கனிமொழி எம்.பி. எச்சரித்துள்ளார்.
ஒரு மாவட்ட ஆட்சியருக்கே இந்தத் தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை.. - கனிமொழி எம்.பி.
கனிமொழி எம்.பி.
Published on: 

சென்னை,

ஒரு மாவட்ட ஆட்சியருக்கே இந்தத் தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளதாக கனிமொழி எம்.பி. கூறியுள்ளார்.

ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக துணைப் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி எம்.பி. செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது;-

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு கள்ளக்குறிச்சி தவெக சட்டமன்ற உறுப்பினர் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியது தொடர்பாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நான் ஒரு பதிவு வெளியிட்டிருந்தேன். கள்ளக்குறிச்சியில் உள்ள திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாவட்டச் செயலாளரும், அங்குள்ள மக்கள் பிரதிநிதிகளும் நேரடியாகச் சென்று, இப்படி ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது என்று புகார் அளித்துள்ளனர். அதைத் தொடர்ந்து, எங்கள் மகளிர் அணியினரும் அங்கு ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். நாங்கள் இந்தப் பிரச்சனையை எழுப்பிய பிறகு, மற்ற இயக்கங்களையும் கட்சிகளையும் சார்ந்த தலைவர்களும் இது குறித்துப் பேசியுள்ளனர்.

தவெக அமைச்சர்கள் மறுப்பு

ஆனால், தொடர்ந்து த.வெ.க.-வைச் சேர்ந்த அமைச்சர்களும், குறிப்பாக நிர்மல் குமார், ராஜ்மோகன் போன்றவர்களும் ‘இப்படி ஒரு சம்பவம் நடைபெறவே இல்லை. சமூக ஊடகங்களில் வரும் ஒரு விஷயத்தை வைத்துக்கொண்டு அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள்’ என்று மிகத் தரக்குறைவான வகையில் விமர்சனங்களை முன்வைத்து வந்தனர். இன்று அவர்கள் என்ன பதில் சொல்லப் போகிறார்கள் என்பதைவிட, முதல்-அமைச்சர் இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார் என்பதுதான் மிக முக்கியமான கேள்வி.

விஜய் ஏன் மவுனம்?

நீதிமன்றம் இந்த விவகாரத்தைக் கையில் எடுக்கும் வரையிலும், தேசிய மகளிர் ஆணையம் தலையிடும் வரையிலும், அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் இது குறித்துப் பேசும் வரையிலும், ‘பெண்களைக் காப்பதற்காகவே நாங்கள் ஆட்சிப் பொறுப்பிற்கு வந்துள்ளோம்’ என்று கூறிய முதல்-அமைச்சர் விஜய் ஏன் மவுனம் சாதித்தார்?

ஆட்சியருக்கே பாதுகாப்பில்லை

ஒரு மாவட்ட ஆட்சியருக்கே இந்தத் தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதில் எழும் மிகப் பெரிய சந்தேகம் என்னவென்றால், ஒரு மாவட்ட ஆட்சியராலேயே புகார் அளிக்க முன்வர முடியவில்லை. அவருக்கு அழுத்தங்கள் கொடுக்கப்பட்டுள்ளன என்பது மிகத் தெளிவாகிறது. புகார் அளிப்பதற்கே ஒரு மாவட்ட ஆட்சியருக்குப் பயம் ஏற்படும் அளவுக்கு மிக மோசமான சூழ்நிலைக்குத் தமிழ்நாடு தள்ளப்பட்டுள்ளது தெளிவாகத் தெரிகிறது.

அரசு என்ன பொறுப்பேற்கும்?

‘பெண்களைக் காப்பதற்காகவே ஆட்சிப் பொறுப்பிற்கு வந்துள்ளேன்’ என்று கூறும் முதல்-அமைச்சர் விஜய் என்ன செய்யப் போகிறார்? இதற்கு என்ன பொறுப்பு ஏற்கப் போகிறார்? இத்தனை நாளாக, ‘இப்படி எதுவும் நடக்கவில்லை’ என்று ஓர் அரசாங்கமே, அதில் உள்ள அனைத்து அமைச்சர்களும் பொய் சொல்லிக் கொண்டிருந்தனர். இன்று நீதிமன்றத்தில், ‘ஜூலை மாதமே இது குறித்து முதன்முதலாகக் புகார் வந்துவிட்டது. தலைமைச் செயலாளரிடமும் (CS) அதிகாரிகளிடமும் தெரிவித்துவிட்டார்’ என்று கூறப்படும் நிலையில், இத்தனை மாதங்களாக எந்த நடவடிக்கையும் எடுக்காமல், தங்களது சட்டமன்ற உறுப்பினரைக் காப்பாற்றுவதிலேயே அவர்கள் குறியாக இருந்துள்ளனர்.

நீதிபதி அரசுக்கு அறிவுறுத்தல்

இப்படிச் செயல்பட்டுவிட்டு, பெண்கள் பாதுகாப்பு குறித்துப் பேச இவர்களுக்கு என்ன தகுதியோ, அருகதையோ இருக்கிறது? யாரையும் காப்பாற்ற அரசு முயற்சிக்க வேண்டாம். அப்படி முயற்சித்தால் அரசுக்குத்தான் தர்மசங்கடம் ஏற்படும். சில நாட்களுக்கு முன்னர் ஒரு பெண் நீதிபதி இது குறித்துப் பேசியபோது அவரை விமர்சித்தனர். இன்று நீதிமன்றத்திலேயே, ‘நீங்கள் குற்றவாளிகளைக் காப்பாற்றக் கூடாது’ என்று நீதித்துறையைச் சேர்ந்த நீதிபதி ஒரு அரசாங்கத்தைப் பார்த்துக் கூறும் அவல நிலை தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ளது. இதைத் தவிர வேறு என்ன சொல்ல முடியும்?

நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை

இந்த வழக்கை நியாயமாக விசாரிக்க வேண்டும் என்பதற்காகத்தான் நீதிமன்றமே தாமாக முன்வந்து இதைத் கையில் எடுத்துள்ளது. இதற்குப் பிறகும், அதைத் தாண்டித் தேசிய மகளிர் ஆணையமும் இதைத் கையில் எடுத்துள்ளது.

அரசின் மீது நம்பிக்கையில்லை

குழுவில் யார் யார் இருக்க வேண்டும், விசாரணை எவ்வாறு நடத்தப்பட வேண்டும் என்று மிகத் தெளிவாகக் கூறுமளவுக்கு இந்த அரசாங்கத்தின் மீது நம்பிக்கை இல்லாததால்தான் நீதிமன்றம் இத்தனை நிபந்தனைகளை விதிக்கிறது. இத்தனை நிபந்தனைகளைப் போடுவதற்குக் காரணமே இந்த அரசாங்கத்தின் மீது நம்பிக்கை இல்லாததுதான்.

நாடாளுமன்றத்திலும் எழுப்புவோம்

புகாரும் பதிவு செய்யப்பட்டுவிட்டது. இதற்கு மேலும் யாரையாவது காப்பாற்ற வேண்டும் என்று நினைத்தால், நிச்சயமாகத் திராவிட முன்னேற்றக் கழகம் இதை மிகப் பெரிய அளவில் கையில் எடுக்கும். இதை இதோடு விட்டுவிட மாட்டோம். எங்கள் தலைவர் இதை மிகப் பெரிய அளவில் கையில் எடுப்பார் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். அதுமட்டுமல்லாமல், நாடாளுமன்றத்திலும் இதை நிச்சயமாக நாங்கள் எழுப்புவோம் என்றார்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X