

சென்னை,
பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-
கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்சட்டி அருகில் கவுண்டன் கொட்டாய் கிராமத்தில் இரண்டரை வயது குழந்தையை கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்ததாக திமுக இளைஞரணி நிர்வாகி பெரியநாயகம் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். தெய்வமாகக் கொண்டாடப்படவேண்டிய குழந்தையை திமுகவைச் சேர்ந்த மனித மிருகம் ஒன்று கொடூரமான முறையில் வேட்டையாடியிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இந்த மனித மிருகத்தை தப்பவிடக் கூடாது.
திமுக ஆட்சிக்கு வந்த பின்னர், தமிழ்நாடு முழுவதும் பாலியல் வன்கொடுமைகள், கொலைகள், கொள்ளைகள் என அனைத்து வகையான குற்றங்களும் அதிகரித்துவிட்டன. கவுண்டன் கொட்டாய் கிராமத்தில் இரண்டரை வயது குழந்தையை திமுக நிர்வாகி சீரழித்ததைப் போலவே தமிழகத்தில் நடைபெறும் பெரும்பான்மையான குற்றங்களுக்கு திமுக நிர்வாகிகள் தான் காரணமாக உள்ளனர்.
திமுக ஆட்சிக்கு வந்துவிட்டாலே அக்கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகளுக்கு போதை மருந்து கடத்தல், பாலியல் வன்கொடுமை, கொலை, கொள்ளை உள்ளிட்ட அனைத்துக் குற்றங்களையும் செய்வதற்கு உரிமம் வழங்கப்படும் நிலைதான் நிலவுகிறது. திமுகவினர் குற்றம் செய்தால் சர்வாதிகாரியாக மாறுவேன் என்று வீர வசனம் பேசிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், திமுகவினரின் அனைத்துக் குற்றங்களையும் கண்டுகொள்ளாமல், கைக்கட்டி, வாய்ப்பொத்தி நிற்பதுதான் இத்தகைய குற்றச்செயல்கள் அதிகரிப்பதற்குக் காரணம் ஆகும்.
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தமிழ்நாட்டில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் நடமாட்டம் பெருகியுள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் ஆண்டுக்கு 22 லட்சம் கிலோ கஞ்சா புழக்கத்தில் விடப்படும் அளவுக்கு நிலைமையை சீரழித்ததுதான் திமுக அரசின் சாதனையாகும். திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 54 விழுக்காடும், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 61 விழுக்காடும் அதிகரித்திருக்கின்றன. இந்த அவலங்கள் அனைத்திற்கும் திமுக அரசுதான் பொறுப்பேற்க வேண்டும்.
பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் பாதுகாப்பு இல்லாத இடம் நரகத்திற்குச் சமமானது. திமுகவின் ஐந்தாண்டுகால ஆட்சியில் தமிழ்நாடு நரகமாக மாறியிருக்கிறது. இதற்கெல்லாம் காரணமான திமுக அரசுக்கு வரும் தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் மறக்க முடியாத பாடத்தைப் புகட்டுவார்கள்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.