கூட்டணியில் 52 கட்சிகளை சேர்த்தாலும் தி.மு.கவுக்கு தோல்வி உறுதி- ஆர்.பி.உதயகுமார் பேச்சு
மதுரை,
மதுரை மாவட்டம் திருமங்கலம் டி.குன்னத்தூர் அம்மா கோவில் வளாகத்தில் மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் டி.கல்லுப்பட்டி, பேரையூர் ஒன்றியம் மற்றும் பேரூராட்சிகளில் உள்ள வாக்குச்சாவடி நிலைய முகவர்களுக்கான ஆலோசனை கூட்டம் சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி. உதயகுமார் தலைமையில் நடைபெற்றது. இதில் தேர்தல் நேரத்தில் பணியாற்றுவது குறித்து அவர் ஆலோசனைகளை வழங்கினார். அவர் பேசியதாவது: “திருமங்கலம் தொகுதி இரட்டை இலை கோட்டை. அதிமுக கோட்டை. விசுவாசம் என்று சொல்லி வேஷம் போட்ட பன்னீர்செல்வம் போன்றவர்களை பற்றி கவலைப்படத் தேவையில்லை. முகாம் மாறி என்ன பதவிகள் வகித்தாலும் அது துரோகத்திற்கான பரிசாகத்தான் இருக்கும்; விசுவாசத்திற்கான அடையாளமாக இருக்காது.
அதிமுகவில் முதலமைச்சர் பதவியை அனுபவித்து விட்டு வெட்கமில்லாமல் திமுகவில் சேருகிறார். இதைவிட பெரிய சோதனைகளையும் அதிமுக சந்தித்துவிட்டது; நீங்களும் சந்தித்துவிட்டீர்கள். ஒரு தடவை பிறக்கிறோம், ஒரு தடவை சாகப் போகிறோம். ஏற்றுக்கொண்ட கொள்கைக்காக உயிரை விட்டால் அதுதான் தன்மானம். முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களே, 5 வருடம் ஆட்சியில் இருந்தீர்களே; ஒரு நாள் கூட 5,000 ரூபாய் கொடுக்கவில்லை.
தேர்தல் வருகிறது என்று இப்போது கொடுக்கிறீர்களே. ஆளும் கட்சி என்று வெளியே வீராப்பாக பேசுகிறீர்கள்; ஆனால் உள்ளே நடுக்கம் இருக்கிறது.திமுக அரசு மீது மக்கள் அதிருப்தியாக உள்ளார்கள் என்று தெரிந்ததற்குப் பிறகுதான் 22 கட்சிகளை கூட்டணியில் சேர்க்கிறீர்கள். 22 கட்சிகள் அல்ல, 52 கட்சிகளை திமுக கூட்டணியில் சேர்த்தாலும் வருகிற சட்டமன்ற தேர்தலில் திமுகவுக்கு தோல்வி உறுதி.” இவ்வாறு அவர் பேசினார்.

