ஆன்லைனில் நீட் தேர்வு நடத்தினாலும் தவறுதான் நடைபெறும் - செல்வப்பெருந்தகை பேட்டி

நீட் தேர்வால் நம்முடைய குழந்தைகள் தொடர்ந்து பலியாகி வருகிறார்கள் என்று செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
ஆன்லைனில் நீட் தேர்வு நடத்தினாலும் தவறுதான் நடைபெறும் - செல்வப்பெருந்தகை பேட்டி
Published on

சென்னை,

சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே இன்று தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி ஆராய்ச்சி துறை சார்பில் நீட் தேர்வு முறைகேட்டை கண்டித்து உண்ணாவிரத போராட்டம் நடந்தது. போராட்டத்திற்கு ஆராய்ச்சிதுறை தலைவர் மாணிக்கவாசகம் தலைமை தாங்கினார். காலை 9.30 மணியளவில் தொடங்கிய உண்ணாவிரத போராட்டம் மாலை 4.30 மணி வரை நீடித்தது.

இதையடுத்து, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை மோர் கொடுத்து உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த செல்வப்பெருந்தகை கூறியதாவது:-

நம்முடைய குழந்தைகள் தொடர்ந்து நீட் தேர்வால் பலியாகி வருகிறார்கள். சிரமப்பட்டு படித்து தேர்வு எழுதினால் எளிதாக ரத்து செய்து விடுகிறார்கள். ஆன்லைனில் நீட் தேர்வு நடத்தினாலும் தவறு தான் நடைபெறும்.

அந்தமான் நிகோபார் தீவில் மரங்களை வெட்ட மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. இதற்கு எதிராக ராகுல் காந்தி போராடி வருகிறார். தமிழ்நாடு முழுவதும் நாங்கள் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம். சட்டமன்றத் தேர்தலுக்கு பின்பு தவெகவுக்கு பெரும்பான்மை கிடைக்காத நிலையில் திமுக - அதிமுக இடையே கூட்டணி பேச்சுவார்த்தை நடந்ததா என்பது குறித்து எங்களுக்கு எதுவும் தெரியாது.

கோவையில் 10 வயது சிறுமிக்கு நடைபெற்ற சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது. எந்த ஆட்சியில் தவறு நடந்தாலும் குற்றம் தான். இரும்புக்கரம் கொண்டு குற்றங்களை அடக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com