விமானத்தில் சென்றவர்கள் கூட வந்தே பாரத் ரெயிலில் செல்ல விரும்புகிறார்கள் -தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி

விமானத்தில் சென்றவர்கள் கூட வந்தே பாரத் ரெயிலில் பயணம் செய்ய விரும்புகிறார்கள் என தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.
விமானத்தில் சென்றவர்கள் கூட வந்தே பாரத் ரெயிலில் செல்ல விரும்புகிறார்கள் -தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி
Published on

சென்னை,

உலக புகழ்பெற்ற ரெயில் பெட்டி தயாரிப்பு தொழிற்சாலைகளில் ஒன்றாக சென்னை ஐ.சி.எப். (ஒருங்கிணைந்த ரெயில்பெட்டி தொழிற்சாலை) விளங்குகிறது. தற்போது, நாட்டிலேயே அதிக வேகத்தில் இயங்கும் வந்தே பாரத் ரெயில் தயாரிப்பில் கவனம் செலுத்தப்படுகிறது. கடந்த சனிக்கிழமை 25-வது வந்தே பாரத் ரெயில் தயாரிக்கப்பட்டு வெளியே அனுப்பப்பட்டது. 25-வது வந்தே பாரத் ரெயில் வெற்றிகரமாக தயாரிக்கப்பட்டதையடுத்து அதிகாரிகளும், ஊழியர்களும் இனிப்புகளை வழங்கி மகிழ்ச்சியை பரிமாறிக்கொண்டனர்.

இந்த நிலையில், தெலுங்கானா கவர்னரும், புதுச்சேரி துணை நிலை கவர்னருமான தமிழிசை சவுந்தரராஜன் நேற்று, பெரம்பூரில் உள்ள ஐ.சி.எப்-க்கு வருகை தந்தார். அப்போது, அங்கு தயாரிப்பில் உள்ள வந்தே பாரத் ரெயில் பெட்டிகளை பார்வையிட்டார். பின்னர், வந்தே பாரத் ரெயிலின் வசதியான இருக்கைகள், பயணிகள் ரெயில் ஓட்டுனருடன் அவசரக்காலங்களின் போது பேச வசதியாக அமைக்கப்பட்டுள்ள டாக் பேக் சிஸ்டம், சார்ஜிங் வசதி, மாற்றுத்தினாளிகளுக்கான சிறப்புக் கழிவறை போன்ற வசதிகளை பாராட்டினார். இதேபோல, 25-வது வந்தே பாரத் ரெயிலை தயாரித்து அனுப்பியதற்காக ஐ.சி.எப். அதிகாரிகள் மற்றும் ஊழியர்களை பாராட்டினார்.

இதைத்தொடர்ந்து, தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-

விமானத்தில் சென்றவர்கள்...

அனைத்து நகரங்களையும் இணைக்கும் வந்தே பாரத் ரெயிலில் மக்கள் மிகவும் அதிக அளவில் பயணம் செய்கிறார்கள். விமானத்தில் பயணம் செய்தவர்கள் கூட இதில் அதே வசதி இருப்பதால் வந்தே பாரத் ரெயிலில் பயணிக்க விரும்பி வருகிறார்கள். அனைத்து வசதிகளும் மிக சிறப்பாக இருக்கிறது. சிறப்பான திட்டமிடலின் மூலம் ரெயிலை தயாரித்து வருகிறார்கள். இதுவரை 71 ஆயிரத்திற்கும் மேலான ரெயில்பெட்டிகளை தயாரித்து உலகின் தலைசிறந்த ரெயில் பெட்டித் தொழிற்சாலையாக விளங்குவது தமிழகத்திற்கே பெருமை சேர்ப்பதாக உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்வில், ஐ.சி.எப். பொது மேலாளர் பி.ஜி.மல்லையா, முதன்மை தலைமை இயந்திரவியல் என்ஜினீயர் சீனிவாஸ் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com