த.வெ.க. ஆட்சியிலும் குழந்தைகள், பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது - சீமான்

சிறுமியின் படுகொலைக்கு காரணமானக் குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று சீமான் தெரிவித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-

கோயம்புத்தூர் மாவட்டம், சூலூர் அருகே கண்ணம்பாளையம் பகுதியில் தனது வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்த பத்து வயது சிறுமி கடத்திச்செல்லப்பட்டு படுகொலை செய்யப்பட்ட செய்தியறிந்து பேரதிர்ச்சி அடைந்தேன். ஒரு பச்சிளம் பிள்ளை கொடூரமாக துன்புறுத்தப்பட்டு, கொல்லப்பட்டிருப்பது நெஞ்சத்தைப் பதைபதைக்கச் செய்கிறது. ஆற்ற முடியா பேரிழப்பைச் சந்தித்து நிற்கும் பெற்றோருக்கும், குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

ஆட்சி மாறினாலும், காட்சிகள் மாறவில்லை என்பது போல, த.வெ.க.வின் ஆட்சியிலும் குழந்தைகள், பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி இருப்பது வெட்கக்கேடானது. பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்பையும், சுதந்திரத்தையும், தனியுரிமையையும் உறுதிசெய்ய முடியாத ஒரு நாடு நாடல்ல; அது சுடுகாடு.

தொடரும் பாலியல் வன்கொடுமைகளும், பெண்களுக்கு எதிரான குற்றங்களும் இச்சமூகம் குற்றச்சமூகமாக மாறிவிட்ட பேராபத்துக்கான அறிகுறியாகும். ஒட்டுமொத்தச் சமூகமும் வெட்கித் தலைகுனிய வேண்டிய பேரவலம் இது. இதற்குக் குற்றங்கள் நடந்தேறிவிட்டப் பின்னர், குற்றவாளிகளைக் கண்டறிந்து கைதுசெய்வது மட்டும் போதாது; குற்றங்கள் நடைபெறுவதற்கு முன்பே, முன்னுணர்ந்து தடுக்கக் குற்றத்தடுப்புக் காவல்துறையும் அமைக்கப்பட வேண்டும்.

எவ்விதக் கொடூரக் குற்றத்தையும் செய்வதற்குரிய குரூரச்சிந்தனையையும், துணிவையும் தரும் போதைப்பொருட்களின் புழக்கத்தையும், பரவலையும் முற்றாக ஒழிக்க வேண்டும். இனியொரு சிறுமியோ, பெண்ணோ ஒருபோதும் பலியாகக்கூடாது.

ஆகவே, சிறுமியின் படுகொலைக்கு காரணமான குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தி, அவர்களுக்குக் கடும் தண்டனைக் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டுமெனவும், சிறுமியின் குடும்பத்தினருக்கு ரூ.50 லட்சம் துயர்துடைப்புத்தொகை வழங்க வேண்டுமெனவும் ஆளும் த.வெ.க. அரசை வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com