

சென்னை,
சமூக நீதித்துறை அமைச்சரும், விசிக துணை பொதுச்செயலாளருமான வன்னி அரசு தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் அடிப்படையான ஐவகை கொள்கை முழக்கங்களுள் 'தமிழ்த் தேசியம்' என்பதுவும் ஒன்றாகும். 1991 ஆம் ஆண்டு இயக்கத்தின் கொடியை வடிவமைத்து அறிமுகப் படுத்திய போதே "சாதி ஒழிப்பு, தமிழ்த் தேசியம், மகளிர் விடுதலை, பாட்டாளி வர்க்க விடுதலை மற்றும் ஏகாதிபத்திய எதிர்ப்பு" ஆகியவற்றை அறிவித்தோம். அது முதல் கடந்த முப்பைத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக நாம் உரத்துப் பேசிவரும் கொள்கைளுள் ஒன்று தான் தமிழ்த் தேசியம் ஆகும். இந்தக் கொள்கையின் அடிப்படையில்தான் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தமிழீழ விடுதலை மற்றும் தமிழீழ விடுதலைப்புலிகள் ஆதரவு நிலைப்பாட்டை மேற்கொண்டு பேரணிகள், ஆர்ப்பாட்டங்கள் கருத்தரங்குகள் மற்றும் மாநாடுகள் என பல்வேறு செயற்திட்டங்களைத் தீட்டி வீரியமாகக் களமாடியிருக்கிறோம். குறிப்பாக, தமிழீழ அங்கீகார மாநாடு, எழும் தமிழீழம் மாநாடு, தமிழர் இறையாண்மை மாநாடு, மாநில சுயாட்சி மாநாடு என இலட்சக் கணக்கிலே மக்களைத் திரட்டி தமிழ்த்தேசிய அரசியலுக்கான அரசியல் உரையாடல்களைத் தீவிரப்படுத்தினோம். அதன் தொடர்ச்சியாகவே தற்போது தமிழ்த்தேசிய எழுச்சி மாநாட்டை ஒருங்கிணைத்துள்ளோம்.
இம்மாநாடு கடந்த மே-17, 2026 அன்று நடைபெறுவதாக மார்ச் மாதத்திலேயே அறிவிக்கப்பட்டது. தவிர்க்கமுடியாத அரசியல் நிலைமைகளால் தள்ளிவைக்கப்பட்டு தற்போது ஆகஸ்ட் 17 அன்று நடைபெறவுள்ளது.
சட்டப் பேரவை தேர்தல் முடிந்து ஆட்சி மாற்றமும் அரங்கேறியுள்ள தற்போதைய சூழலில், 'இம்மாநாடு பொருத்தமற்றதாக உள்ளதே'- என ஒருசிலர் பேசுகின்றனர். ஆனால், தேர்தல் அரசியலைக் கடந்து கருத்தியல் நோக்கில் அணுகுவோர் இதனை வெகுவாக வரவேற்கும் நிலையைக் காணமுடிகிறது. குறிப்பாக, பாரதிய ஜனதா மற்றும் சங்கப் பரிவாரங்கள் உயர்த்திப் பிடிக்கும் 'ஹிந்து ராஷ்ட்ரா' என்னும் மதவழி தேசியவாதத்தின் விளைவுகளைப் புரிந்தோர் அதற்கு எதிரான ஒரு நடவடிக்கையாக நாம் முன்னிறுத்தும் தமிழ்த்தேசியம் என்னும் மொழிவழி தேசியத்தை வரவேற்கின்றனர்.
புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் 'மதசார்பற்ற - சமத்துவ இந்தியா' என்னும் புரட்சிகரக் கனவைச் சிதைக்கும் உள்நோக்கம் கொண்ட சங்கப் பரிவாரங்களின் 'மதவழி தேசிய'த்துக்கு மாற்றாகக் கட்டமைக்க வேண்டிய தேசியவாத அரசியல் 'மொழிவழி தேசியமே' என்பதை ஓங்கி ஒலிக்கும் கருத்தியல் களமே இந்த மாநாடு ஆகும்.
தமிழ்நாட்டைப் பொருத்தவரையில் மொழிவழி தேசியம் என்றால் அது 'தமிழ்த் தேசியமே' ஆகும். தமிழ்த் தேசியம் என்பது மொழி அடையாளத்தை மட்டுமே உள்ளடக்கமாகக் கொண்டதல்ல என்பதைத் தெளிவுப்படுத்தும் நோக்கில் இன்று இம்மாநாட்டை நாம் ஒருங்கிணைக்க வேண்டிய வரலாற்றுத் தேவை எழுந்துள்ளது. 'தமிழ், தமிழன் மற்றும் தமிழ்நாடு' என 'மொழி-இனம்-வாழ்நிலம்' என்கிற அலகுகளைக் கொண்டு தனித்து இயங்கும் அரசு மற்றும் ஆட்சியதிகாரத்தை வென்றெடுக்கும் நோக்கத்தை இது முதன்மைக்கூறாகப் பெற்றிருந்தாலும் அதன் பிற அடிப்படைக் கூறுகளை அடையாளப்படுத்துவதும் அவற்றைக் கூர்மைப்படுத்துவதும் தமிழ்த்தேசியத்தின் இன்றியமையாத தேவைகளாக உள்ளன. அந்தப் பிற அடிப்படைக் கூறுகளுள் முதனமையானவை சாதி ஒழிப்பு மற்றும் மதசார்பின்மை ஆகியவை ஆகும். அத்துடன் அவற்றின்வழியிலான 'சுதந்திரம் சமத்துவம் மற்றும் சகோதரத்துவம்' ஆகியனவும் ஆகும்.
இந்திய அரசமைப்புச் சட்டத்தின் உயிர்மூச்சுக் கோட்பாடுகளான சுதந்திரம் சமத்துவம் மற்றும் சகோதரத்துவம் ஆகியவற்றை வென்றெடுக்க சாதி ஒழிப்பும் மதசார்பின்மையும் தவிர்க்கமுடியாத கட்டாயத் தேவைகளாகும். இத்தகைய சாதிஒழிப்புக்கும் மதச்சார்பின்மைக்கும் நேரெதிரான செயலதிட்டமே சங்கப்பரிவாரங்களின் மதசார்புத் தேசியவாதமான 'ஹிந்து ராஷ்ட்ரம்' என்கிற அரசியலாகும். இதற்கு எதிராக அல்லது மாற்றாக இன்னொரு மதசார்பு தேசியத்தை முன்னிறுத்த இயலாது. இந்நிலையில் தான் 'மதம் சார்ந்த அடையாள அரசியலுக்கு' எதிராக 'மதசார்பின்மை என்னும் அடையாளமற்ற அரசியல்' தேவையாகிறது. தேசிய இனம் என்னும் அடையாளமும், தேசிய இனங்களின் அய்க்கியமும், தேசிய இனங்களின் கூட்டாட்சி என்னும் அடிப்படையிலான தேசியமே மொழிவழி தேசியமாகும். அதனடிப்படையில், தமிழர்கள் தமிழ்த் தேசிய இனமாக எழுச்சிபெறவேண்டும் என்பதைப் போல ஒவ்வொரு தேசிய இனமும் மொழிவழி அடையாமாகவே அணிதிரள வேண்டும். அத்தகைய தேசிய இனங்களுக்கிடையில் நல்லிணக்கமான நட்புறவு மற்றும் ஐக்கியத்தைக் கட்டமைக்க வேண்டும். தேசிய இனங்களுக்கிடையிலான ஐக்கியத்திலிருந்தே இந்திய அளவில் மதவாத தேசியத்திற்கு எதிரான மாற்று தேசியத்தை புதிதாகக் கட்டி எழுப்பமுடியும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.