

சென்னை,
சென்னை சத்தியமூர்த்தி பவனில், தமிழ்நாடு காங்கிரஸ் வடக்கு மற்றும் கிழக்கு மண்டலத்தை சேர்ந்த மாவட்ட தலைவர்கள், மாவட்ட பார்வையாளர்கள் மற்றும் அணித் தலைவர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தலைமை தாங்கினார். அகில இந்திய காங்கிரஸ் செயலாளரும், தமிழக பொறுப்பாளருமான ஸ்ரீவெல்ல பிரசாத், தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் கிருஷ்ணசாமி, பொதுச்செயலாளர் கே.தணிக்காசலம், பொதுச்செயலாளரும், தமிழ்நாடு காங்கிரஸ் விளம்பர பிரிவு ஒருங்கிணைப்பாளருமான கே.சிரஞ்சீவி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் தலைவி ஜான்சிராணி, சேவாதள தலைவர் குங்பூ விஜயன், சிறுபான்மை பிரிவு தலைவர் அஸ்லம் பாஷா, ஆராய்ச்சி துறை தலைவர் நாசே ஆர்.ராஜேஷ் உள்பட 11 பிரிவு தலைவர்கள், சென்னை கிழக்கு மாவட்டத் தலைவர் சிவ.ராஜசேகரன், மேற்கு மாவட்ட தலைவர் வீரபாண்டியன் உள்பட காஞ்சீபுரம், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், கிருஷ்ணகிரி, சேலம், தர்மபுரி, நாமக்கல், பெரம்பலூர், அரியலூர், தஞ்சை, நாகை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 35 மாவட்ட தலைவர்கள் மற்றும் மாவட்ட பார்வையாளர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் கலந்துகொண்ட பின் திருநாவுக்கரசர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பா.ஜனதாவுடன் கூட்டணி இல்லை என்று தெரிவித்தால், வருமான வரித்துறை சோதனை நடத்தப்படும் என்ற பயமும், பா.ஜனதாவுடன் கூட்டணி என்று சொன்னால் ஓட்டு கிடைக்காது என்ற பயமும் அ.தி.மு.க.வினரிடம் இருக்கிறது. எனவே மற்ற கட்சியினர் கூட்டணி குறித்து பேசுவதை பார்த்தாலே அவர்களுக்கு வயிறு எரி கிறது.
தேர்தலை பார்த்தாலே அ.தி.மு.க.வுக்கு பயம். எனவே உள்ளாட்சி தேர்தல், இடைத்தேர்தலை தள்ளிப்போடுகிறார்கள். கோர்ட்டு திரும்ப, திரும்ப கண்டனம் தெரிவித்த பிறகும் உள்ளாட்சி தேர்தலை நடத்தாமல் காலம் தாழ்த்தி வருகின்றனர். இடைத் தேர்தலை பொறுத்தவரையில் 2 தொகுதிகளுக்கு வருகிற ஜனவரி மாதத்துக்குள் தேர்தல் நடத்தியாக வேண்டும். அந்த தேர்தலுடன் 18 தொகுதிகளுக்கான தேர்தலையும் நடத்த வேண்டும்.
ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் எதுவும் சொல்லாத நிலையில், அடையாளம் தெரியாத, கட்சி வேலையை பார்க்காத நபர்களின் (ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஆதரவாளர்கள்) அறிக்கைக்கு நான் பதில் சொல்ல வேண்டிய தேவையில்லை. இது குறித்து டெல்லி தலைமையுடன் சேர்ந்து உரிய நடவடிக்கை எடுப்பேன்.
எம்.ஜி.ஆர். இறந்த தினத்தன்று நடந்தது என்ன என்று கூறினால், அது குறித்து கோர்ட்டில் நான் பரிகாரம் தேடிக்கொள்வேன். 31 ஆண்டுகளுக்கு பிறகு இது போன்று அறிக்கை வெளியிட்டால் அதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. சேலத்தில் மாணவியை கற்பழித்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.