

சென்னை,
முதுநிலை மருத்துவ கலந்தாய்வில் போலிச் சான்றிதழ் முறைகேடுகள் குறித்து சிறப்பு புலனாய்வு விசாரணை நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் எம்பி தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-
மோடி–அமித்ஷா தலைமையிலான பாஜக அரசில் சமூக நீதி எத்தகைய மோசடிக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது என்பதற்கு முதுநிலை மருத்துவக் கலந்தாய்வில் தொடர்ந்து அரங்கேறும் EWS சான்றிதழ் முறைகேடுகளே நேரடிச் சான்றாகும். கடந்த 2025-ஆம் ஆண்டில், ஆண்டு வருமானம் ரூ.8 லட்சத்திற்குள் இருப்பதாகக் கூறி EWS சான்றிதழ் பெற்ற சுமார் 140 விண்ணப்பதாரர்கள், ஆண்டுக்கு ரூ.48.5 லட்சம் முதல் ரூ.62.5 லட்சம் வரை கட்டணம் கொண்ட தனியார் மருத்துவக் கல்லூரிகளில் ரூ.1 கோடிக்கும் அதிகமான கட்டணப் படிப்புகளைப் பெற்றது அம்பலமானது. அந்தப் பகிரங்க முறைகேட்டின் மீது எந்தவித உறுதியான நடவடிக்கையோ கடுமையான தணிக்கையோ எடுக்காமல் மத்திய பாஜக அரசு மெத்தனமாக வேடிக்கை பார்த்ததன் விளைவாக, இப்போது 2026-ஆம் ஆண்டிலும் 100-க்கும் மேற்பட்ட EWS சான்றிதழ் வைத்திருப்பவர்கள் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் ரூ.1.8 கோடி முதல் ரூ.2.1 கோடி வரையிலும், சில இடங்களில் ரூ.4 கோடி வரையிலும் செலவழித்து சுயநிதி இடங்களை வெளிப்படையாகவே கைப்பற்றியுள்ளனர்.
குடும்பத்தின் ஆண்டு மொத்த வருமானம் ரூ.8 லட்சத்திற்குள் இருப்பதாக அரசு அலுவலகங்களில் சான்றிதழ் பெறும் ஒருவரால், பல கோடி ரூபாய் கட்டணம் செலுத்த முடிகிறது என்றால், மோடி-அமித்ஷா ஆட்சியில் EWS வருமானச் சான்றிதழ்கள் எவ்வித சரிபார்ப்புமின்றி விநியோகிக்கப்படுகின்றன என்ற உண்மை வெட்டவெளிச்சமாகியுள்ளது. நவி மும்பை டி.ஒய். பாட்டீல் மருத்துவக் கல்லூரியில் மகளிர் மருத்துவப் பிரிவு (MS Ob-Gyn) இடமும், பெங்களூரு ராஜராஜேஸ்வரி கல்லூரியில் ரேடியோ-டயக்னாசிஸ் (MD Radio-diagnosis) இடமும் முறையே ரூ.2 கோடி மற்றும் ரூ.1.8 கோடி கட்டணத்தில் 70,000-க்கும் அதிகமான தரவரிசை பெற்ற EWS விண்ணப்பதாரர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. தகுதியுள்ள ஏழை எளிய மாணவர்களுக்குக் கிடைக்க வேண்டிய சமூகப் பாதுகாப்பைப் பணம் படைத்தவர்கள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி, முறைகேடாகப் பெற்ற சான்றிதழ்களின் மூலம் உயர் மருத்துவ இடங்களைக் கைப்பற்றுவதை மத்திய அரசு அனுமதிப்பது நிர்வாகத் தோல்வியின் உச்சமாகும்.
இது விளிம்புநிலை ஏழை மக்களுக்கான இடஒதுக்கீடாகச் செயல்படாமல், பாஜக அரசின் நிர்வாகக் கண்மூடித்தனத்தால் பெருஞ்செல்வந்தர்கள் சட்டத்தின் ஓட்டைகளைப் பயன்படுத்தி ஏழைகளின் உரிமைகளைப் பறிக்கும் திட்டமிட்ட மோசடியாக மாறியுள்ளது. முறையான கள ஆய்வோ நிதித் தணிக்கையோ இன்றி போலி EWS சான்றிதழ்களை அள்ளித் தரும் இந்த முறைகேட்டு வலையமைப்பை முறியடிக்க மத்திய அரசு இதுவரை எந்தத் துணிச்சலான நடவடிக்கையையும் எடுக்கவில்லை. அதிகார வர்க்கத்தின் ஆசியோடு பல நூறு கோடி ரூபாய் மதிப்பிலான மருத்துவ இடங்கள் போலிச் சான்றிதழ்கள் மூலம் கொள்ளையடிக்கப்பட்டு வரும் இந்த மாபெரும் கல்வி ஊழலின் பின்னணியில் மோடி-அமித்ஷா அரசின் அரசியல் ஆதரவும் நிர்வாகத் தோல்வியுமே ஆணிவேராக உள்ளன.
எனவே, நாடு தழுவிய அளவில் அரங்கேறி வரும் இந்த மெகா EWS சான்றிதழ் முறைகேடுகள் மற்றும் பல கோடி ரூபாய் கொள்ளை குறித்து உடனடியாகச் சிறப்புப் புலனாய்வு விசாரணைக்கு மோடி-அமித்ஷா அரசு உத்தரவிட வேண்டும். வருமான உச்சவரம்பு மற்றும் சொத்து விபரங்களை வெளிப்படைத்தன்மையுடன் தீவிரமாகத் தணிக்கை செய்து, மோடி-அமித்ஷா அரசு உத்தரவிட வேண்டும்.
வருமான உச்சவரம்பு மற்றும் சொத்து விபரங்களை வெளிப்படைத்தன்மையுடன் தீவிரமாகத் தணிக்கை செய்து, பணபலத்தாலும் போலிச் சான்றிதழ்களாலும் அபகரிக்கப்பட்ட அனைத்து மருத்துவ இடங்களையும் உடனடியாகப் பறிமுதல் செய்ய வேண்டும்; மோடி-அமித்ஷா அரசின் அரசியல் ஆசியோடும் அதிகாரத்தின் துணையோடும் ஏழை மாணவர்களின் எதிர்காலத்தைக் கொள்ளையடிக்கும் பாஜக-ஆர்.எஸ்.எஸ் நிழல் மாபியாக்கள் மற்றும் அவர்களுக்குத் துணைபோகும் அதிகாரிகள் மீது கடும் குற்றவியல் நடவடிக்கை எடுப்பதோடு, பறிக்கப்பட்ட அந்த இடங்களை தகுதியுள்ள ஏழை எளிய மாணவர்களுக்கே உரிய முறையில் மறுஒதுக்கீடு செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.