

ராமநாதபுரம்,
திருமணத்திற்கு சில மணி நேரங்களே இருந்த நிலையில், முன்னாள் காதலன் ஜோடியாக எடுத்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டதால் திருமணம் நின்றுபோன அதிர்ச்சியில், மணப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் ராமநாதபுரம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே உள்ள மூப்பன்வலசை கிராமத்தைச் சேர்ந்தவர் சரிதா (வயது 22). அவரும், பிரம்பன்வலசை கிராமத்தைச் சேர்ந்த லோகேஷ் என்பவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இந்த நிலையில் லோகேஷின் குணம் மற்றும் செயல்பாடுகள் பிடிக்காததால், சரிதா அவரிடமிருந்து விலகியுள்ளார். அதனைத் தொடர்ந்து, சரிதாவின் பெற்றோர் அவருக்கு வேறு ஒரு மாப்பிள்ளையுடன் திருமண நிச்சயம் செய்தனர்.
அவர்களின் திருமணம் கடந்த 30-ந்தேதி நடைபெறவிருந்தது. அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வந்த நிலையில், சரிதாவுக்குத் திருமணம் நடப்பதை அறிந்த லோகேஷ் கடும் ஆத்திரமடைந்தார். எனவே பழிவாங்கும் நோக்கில், சரிதாவுடன் முன்பு எடுத்த நெருக்கமான புகைப்படங்களை தனது வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் மற்றும் சமூக வலைதளங்களில் லோகேஷ் பதிவிட்டார்.
அந்த புகைப்படங்கள் மணமகன் வீட்டாருக்கு தெரியவந்ததை அடுத்து, அவர்கள் அதிர்ச்சியடைந்து திருமணத்தை அதிரடியாக நிறுத்தினர். உறவினர்கள் மற்றும் ஊர் மக்கள் முன்னிலையில் திருமணம் நின்றதால், சரிதா கடுமையான அவமானத்திற்கும் மன உளைச்சலுக்கும் ஆளானார். அதனால் விரக்தியடைந்த அவர், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
தகவலறிந்து வந்த உச்சிப்புளி போலீசார், சரிதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்ப முயன்றனர். ஆனால், சரிதாவின் தற்கொலைக்கு காரணமான லோகேஷை உடனடியாக கைது செய்யும் வரை உடலை வாங்க மாட்டோம் எனக்கூறி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. தலைமறைவாக உள்ள லோகேஷை தனிப்படை அமைத்து போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.