

சென்னை,
முன்னாள் படைவீரர் மகளுக்கு திருமண நிதியுதவி, மாற்றுத்திறன் படைத்த முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களின் வாரிசுகளுக்கு மாதாந்திர நிதியுதவியினை மனிதவள மேலாண்மைத் துறை மற்றும் முன்னாள் படைவீரர் நலத்துறை அமைச்சர் சரத்குமார் இன்று வழங்கினார். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-
முதல்-அமைச்சர் விஜய்15.08.2026 அன்றைய சுதந்திர தின விழா உரையில், தாய் நாட்டிற்காக தங்களுடைய இளம் வயதை தியாகம் செய்து நமது நாட்டின் பாதுகாப்பிற்காக அரும்பாடுபட்ட முன்னாள் படைவீரர்களின் நலன் கருதி அவர்களது இரண்டு மகள்களுக்கு வழங்கப்படும் திருமண மானிய நிதியுதவி ரூ.25,000-லிருந்து ரூ.50,000 ஆக உயர்த்தி வழங்கப்படும் என்றும், மாற்றுத்திறனாளி முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களை சார்ந்தோர்களுக்கு வழங்கப்படும் மாதாந்திர நிவாரண நிதியுதவி ரூ.5,000-லிருந்து ரூ.7,000 ஆக உயர்த்தி வழங்கப்படும் என்றும் அறிவித்தார்.
மேலும், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் 2026-27ம் நிதி ஆண்டிற்கான பொதுத்துறை மானியக் கோரிக்கையின்போது முன்னாள் படைவீரர் நலன் தொடர்பாக அமைச்சர், முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்தம் விதவைகளுக்கு வழங்கப்படும் மாதாந்திர நிதியுதவி தொகை ரூ.4,000-லிருந்து ரூ.6,000 ஆக உயர்த்தி வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டார்.
மேற்படி அறிவிப்புகளை நடைமுறைப்படுத்தும் வகையில், 03.11.2026 அன்று, சென்னை நந்தனத்தில் உள்ள தமிழ்நாடு முன்னாள் படைவீரர் கழக அலுவலகத்தில் வைத்து முன்னாள் படைவீரர் மகள் ஒருவருக்கு திருமண மானிய நிதியுதவியாக ரூ.50,000, 5 மாற்றுத்திறனாளி முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களை சார்ந்தோர்களுக்கு மாதாந்திர நிவாரணமாக ஒரு மாதத்திற்கு ரூ.7,000 நிதியுதவி மற்றும் 5 முன்னாள் படைவீரர் மற்றும் அவர்களை சார்ந்தோர்களுக்கு ஒரு மாதத்திற்கு ரூ.6,000 நிதியுதவி ஆகிய 11 பயனாளிகளுக்கு மனிதவள மேலாண்மைத் துறை மற்றும் முன்னாள் படைவீரர் நலத்துறை அமைச்சர் சரத்குமாரால் நேரடியாக வழங்கப்பட்டது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.