தேர்வு கட்டணம் செலுத்திய அரியர் மாணவர்கள் குறைந்தபட்ச மதிப்பெண்ணுடன் தேர்ச்சி

தேர்வு கட்டணம் செலுத்திய அரியர் மாணவர்களுக்கு தேர்ச்சி அளித்து, சென்னை பல்கலைக்கழகம் தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது.
தேர்வு கட்டணம் செலுத்திய அரியர் மாணவர்கள் குறைந்தபட்ச மதிப்பெண்ணுடன் தேர்ச்சி
Published on

சென்னை:

தேர்வு கட்டணம் செலுத்திய அரியர் மாணவர்களுக்கு குறைந்தபட்ச மதிப்பெண்ணுடன் தேர்ச்சி முடிவை சென்னை பல்கலைக்கழகம் வெளியிட்டு இருக்கிறது.

கொரோனா நோய்த் தொற்று காரணமாக கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் நடத்த முடியாமல் போனது. இதையடுத்து அவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டு, அவர்களுக்கான மதிப்பெண் வழங்குவது எப்படி? என்பது குறித்தும் அரசு தெரிவித்தது. ஆனால் இறுதி செமஸ்டர் மாணவர்களுக்கு மட்டும் ஆன்லைன் வழியாக தேர்வு நடத்தப்பட்டது. அவர்களுக்கான தேர்வு முடிவையும் ஒவ்வொரு பல்கலைக்கழகங்கள் அறிவித்து வருகின்றன.

இந்த நிலையில் இறுதி செமஸ்டர் தவிர மற்ற செமஸ்டர்களில் அரியர் வைத்திருக்கும் மாணவர்கள் தேர்வு கட்டணம் செலுத்தி இருந்தால் தேர்ச்சி பெற்றதாக ஏற்கனவே தமிழக அரசால் அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் அதற்கு அகில இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனம் கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தது. இதுதொடர்பான வழக்கும் கோர்ட்டில் நிலுவையில் இருக்கிறது.

இதற்கிடையில் சென்னை பல்கலைக்கழகம் அரியர் மாணவர்களுக்கு குறைந்தபட்ச மதிப்பெண்ணுடன் தேர்ச்சி வழங்குவது தொடர்பாக சிண்டிகேட் கூட்டத்தில் ஆலோசித்து சில நாட்களுக்கு முன்பாக முடிவையும் எடுத்தது.

அதன் அடிப்படையில் சென்னை பல்கலைக்கழகம் இறுதி செமஸ்டர் தேர்வு தவிர இதர செமஸ்டர்களில் அரியர் வைத்திருக்கும் மாணவர்களுக்கு குறைந்தபட்ச மதிப்பெண்ணுடன் தேர்வு முடிவை நேற்று வெளியிட்டு இருக்கிறது. அரியர் தேர்வுக்காக கட்டணம் செலுத்திய மாணவர்களுக்கு இந்த தேர்ச்சி முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட மாணவர்கள் தங்களுக்கான தேர்வு முடிவுகளை https://egovernance.unom.ac.in என்ற இணையதளத்தில் சென்று தெரிந்து கொள்ளலாம்.

இதன் மூலம் சென்னை பல்கலைக்கழகத்தின் கீழ் வரும் அனைத்து கல்லூரிகளிலும் இருந்து அரியர் தேர்வு எழுத கட்டணம் செலுத்தி இருந்த 1 லட்சத்து 9 ஆயிரத்து 518 மாணவ-மாணவிகளுக்கு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு உள்ளது.

இந்த தேர்வு முடிவில் திருப்தி இல்லாத மாணவ-மாணவிகள் மீண்டும் தேர்வு எழுதி மதிப்பெண் பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என்றும் பல்கலைக்கழகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. அரியர் மாணவர்களுக்கு தேர்ச்சி என்ற தமிழக அரசின் அறிவிப்பை முதலாவதாக சென்னை பல்கலைக்கழகம் பின்பற்றி தேர்வு முடிவை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com