ஆசைக்கு இணங்க வேண்டும்... ஆபாச படத்தை காட்டி இளம்பெண்ணை மிரட்டிய முன்னாள் காதலன் கைது

பெண்கள் வன்கொடுமை சட்டத்தில் வழக்குப்பதிவு செய்த போலீசார், வாலிபரை கைது செய்தனர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

விழுப்புரம்,

ஆசைக்கு இணங்க வேண்டும் இல்லாவிட்டால் நெருக்கமாக பழகியபோது எடுத்த ஆபாச படங்களை இணையதளத்தில் வெளியிட்டுவிடுவேன் என்று இளம்பெண்ணை மிரட்டிய முன்னாள் காதலன் கைது செய்யப்பட்டார்.

இன்ஸ்டாகிராமில் பழக்கம்

விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர் அமீர்சுகேல் (28 வயது). இவர் எலக்ட்ரீசியன் வேலை பார்த்து வந்தார். இன்ஸ்டாகிராம் மூலமாக சென்னை சூளைமேட்டில் வசிக்கும் இளம்பெண் ஒருவரோடு இவருக்கு பழக்கம் ஏற்பட்டது. 4 வருடங்களாக இன்ஸ்டாகிராம் மூலம் இருவரும் பழகி வந்தனர். பின்னர் நேரடியாக சந்தித்து நெருக்கமாகவும் இருந்துள்ளனர். அந்தப் பெண் ஏற்கெனவே திருமணமாகி, விவாகரத்து பெற்றவர்.

2-வது திருமணம்

இந்த நிலையில், அமீர்சுகேல் வெளிநாட்டிற்கு வேலை செய்ய போய்விட்டார். வெளிநாட்டிற்கு சென்றாலும் காதலியோடு தொடர்பில் இருந்துள்ளார். ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக அந்தப் பெண் 2-வது திருமணம் செய்து கொண்டு புதிய வாழ்க்கையை தொடங்கிவிட்டார். தன்னை மறந்துவிடும்படி காதலன் அமீர்சுகேலையும் கேட்டுக்கொண்டார். ஆனால் அமீர்சுகேல் உன்னை மறக்க முடியாது என்றும், என்னுடன் உள்ள தொடர்பை துண்டிக்கக்கூடாது என்றும் வற்புறுத்தி வந்ததாக தெரிகிறது.

மிரட்டல்

இந்த நிலையில், வெளிநாட்டில் இருந்து சென்னை வந்த அமீர்சுகேல் காதலியை சந்தித்துள்ளார். அப்போது தன்னுடைய ஆசைக்கு இணங்க வேண்டும் என்றும், இல்லாவிட்டால் ஏற்கனவே நெருக்கமாக பழகியபோது எடுத்த ஆபாச படங்களை இணையதளத்தில் வெளியிட்டுவிடுவேன் என்றும் மிரட்டியுள்ளார். ஒரு சில படங்களை இணையதளத்தில் அவர் வெளியிட்டதாகவும் கூறப்படுகிறது.

கைது

அமீர்சுகேலுக்கு வேறு சில பெண்களுடனும் பழக்கம் இருந்ததாக தெரிகிறது. இதனால் அமீர்சுகேல் மீது வெறுப்படைந்த அந்த இளம்பெண் சூளைமேடு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீசார் பெண்கள் வன்கொடுமை சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து, அமீர்சுகேலை நேற்று முன்தினம் கைது செய்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com