செம்பரம்பாக்கம் ஏரியில் உபரி நீர் திறப்பு நிறுத்தம்

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரிநீர் திறப்பு நிறுத்தப்பட்டது.
செம்பரம்பாக்கம் ஏரியில் உபரி நீர் திறப்பு நிறுத்தம்
Published on

பூந்தமல்லி,

நிவர், புயல் காரணமாக பெய்த கனமழையால் ஏரிகளுக்கு நீர் வரத்து அதிகரித்தது. செம்பரம்பாக்கம் ஏரியின் உயரம் 24 அடி. மொத்த கொள்ளளவு 3,645 மில்லியன் கனஅடி ஆகும்.

தொடர் மழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் மட்டம் 22 அடியை தாண்டியதால் கடந்த மாதம் 25-ந் தேதி முதல் உபரிநீர் திறந்து விடப்பட்டது. 9 ஆயிரம் கனஅடி வரை தண்ணீர் வெளியேற்றப்பட்டது. பின்னர் மழை இல்லாததால் 30-ந் தேதி உபரிநீர் திறப்பு நிறுத்தப்பட்டது.

அதன்பிறகு மீண்டும் உருவான புரெவி புயலால் பெய்த பலத்த மழையால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்தது. இதனால் 2-வது முறையாக கடந்த 3-ந் தேதி செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரிநீர் திறந்து விடப்பட்டது. 3 ஆயிரம் கனஅடி வரை தண்ணீர் திறக்கப்பட்டு இருந்தது.

தற்போது மழை இல்லாததால் ஏரிக்கு நீர்வரத்து குறைந்தது. 200 கனஅடி தண்ணீர் மட்டுமே வந்து கொண்டிருக்கிறது. இதையடுத்து செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக திறந்துவிடப்பட்ட உபரி நீர் நேற்று முதல் முற்றிலுமாக நிறுத்தப்பட்டது.

நேற்று காலை நிலவரப்படி ஏரியின் நீர்மட்டம் 22.53 அடியாக பதிவானது. 3,256 மில்லியன் கன அடி தண்ணீர் இருப்பு உள்ளது. சென்னை குடிநீருக்காக 100 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.இதனால் கடந்த ஒரு வாரமாக தடை செய்யப்பட்டு இருந்த குன்றத்தூர்-ஸ்ரீபெரும்புதூர் சாலையில் மீண்டும் போக்குவரத்து தொடங்கியது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com