பண்டிகை காலத்தில் ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணமா? தமிழகம் முழுவதும் தீவிர வாகனத் தணிக்கை!

ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார் வரும் பட்சத்தில், அனுமதி ரத்து போன்ற கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
பண்டிகை காலத்தில் ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணமா? தமிழகம் முழுவதும் தீவிர வாகனத் தணிக்கை!
Published on: 

சென்னை,

காந்தி ஜெயந்தி, ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி ஆகிய தொடர் வார விடுமுறையை முன்னிட்டு ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிப்பதைத் தடுக்க தீவிர வாகனத் தணிக்கை நடைபெற்று வருகிறது.

இது தொடர்பாக, தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-

தமிழ்நாட்டில் சுமார் 5400 ஆம்னி பேருந்துகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு இயக்கப்பட்டு வருகிறது. வெளி மாநிலங்களிலிருந்து சுமார் 1000 ஆம்னி பேருந்துகள் தமிழ்நாட்டிற்குள் இயக்கப்பட்டு வருகிறது.

காந்தி ஜெயந்தி, ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி ஆகிய தொடர் வார விடுமுறையை முன்னிட்டு, ஆம்னி பேருந்துகளில் பொதுமக்கள் மற்றும் பயணிகளிடமிருந்து வழக்கத்திற்கு மாறாக அதிக அளவில் கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் பெறப்பட்டதை தொடர்ந்து, நேற்றைய தினத்திலிருந்து, மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்களின் உத்தரவின் படியும், போக்குவரத்து ஆணையர் அவர்களின் வழிகாட்டுதலின் படியும் தமிழ்நாடு முழுவதும் வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் அடங்கிய குழு அமைத்து ஆம்னி பேருந்துகளில் தீவிர வாகனத் தணிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதன் முன்னோட்டமாக 01.10.2026 அன்று மாலை மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்கள் கோவை, காந்திபுரம் பகுதிகளில் ஆம்னி பேருந்துகளை நிறுத்தி பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டதா என்பதை ஆய்வு செய்தார்கள்.

அதன்படி, நேற்று தமிழ்நாடு முழுவதும் 2,247 ஆம்னி பேருந்துகள் தணிக்கை செய்யப்பட்டன. இதில் விதிமீறல்கள் கண்டறியப்பட்ட 664 ஆம்னி பேருந்துகளுக்கு தணிக்கை அறிக்கை மற்றும் இ-சலான் வழங்கப்பட்டு, உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இந்தத் தீவிர தணிக்கையின் போது, விதிமீறல்களுக்காக இணக்க கட்டணம் ரூ.11,75,000/- நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ரூ.4,32,670/- வரி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும், பிற மாநிலங்களில் பதிவு செய்யப்பட்டு தமிழ்நாட்டில் இயக்கப்பட்ட ஆம்னி பேருந்துகளிடமிருந்து தமிழ்நாட்டிற்கு செலுத்த வேண்டிய வரியாக ரூ.41,15,116/- வசூலிக்கப்பட்டது. அபராதமாக ரூ.3,32,000/- வசூலிக்கப்பட்டது.

இதன் மூலம், நேற்றைய தினம் மட்டும் ஆம்னி பேருந்துகள் தொடர்பாக வரி மற்றும் இணக்கக் கட்டணமாக மொத்தம் ரூ.44,47,116/- வசூலிக்கப்பட்டுள்ளது. இதனால் வசூலிக்கப்பட்ட மற்றும் நிர்ணயிக்கப்ட்ட வரி, இணக்க கட்டணம் மொத்தம் ரூ.60,54,786/- ஆகும்.

மேற்கண்ட தணிக்கையின் போது, 01.10.2026 அன்று மாலை முதல் 02.10.2026 அதிகாலை வரை, அதிக கட்டணம் வசூலித்ததாக கண்டறியப்பட்ட 11 ஆம்னி பேருந்துகள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு ரூ.8450/- பயணிகளுக்கு திரும்பப் பெற்று வழங்கப்பட்டது.

மேலும், வரி செலுத்தாத மற்றும் தகுதிச் சான்று இல்லாத 8 ஆம்னி பேருந்துகள் சிறை பிடிக்கப்பட்டுள்ளது.ஆம்னி பேருந்துகளில் ஆன்லைன் மூலம் பயணிகளால் பதிவு செய்யப்பட்ட பயணச்சீட்டை வாகன உரிமையாளர் ரத்து செய்யும் நேர்வில் அந்த பயணிகளுக்கு மாற்றுப்பேருந்தில் பயணம் செய்ய ஏற்பாடு செய்யப்படவேண்டும். தவறும் பட்சத்தில், சம்பந்தப்பட்ட ஆம்னி பேருந்து அனுமதிச்சான்று ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

பொதுமக்கள் மற்றும் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு, பண்டிகைக் காலங்களில் ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிப்பதைத் தடுக்கவும், விதிமீறல்களை கட்டுப்படுத்தவும் இந்தச் சிறப்பு வாகனத் தணிக்கை தொடர்ந்து தீவிரமாக 21.10.2026 வரை மேற்கொள்ளப்படும்.

எதிர்வரும் நாட்களில், ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார் வரும் பட்சத்தில், அனுமதி ரத்து போன்ற கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

புகார் தெரிவிக்க வேண்டிய கட்டணமில்லா தொலைபேசி எண் : 1800 425 6151 கைப்பேசி எண் : 9384808333.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com