சமணர் படுகைக்கு செல்லும் வழி திறக்கப்படுமா?

திருப்பரங்குன்றம் மலையில் உள்ள சமணர் படுகைக்கு செல்லும் வழியை திறக்க சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சமணர் படுகைக்கு செல்லும் வழி திறக்கப்படுமா?
Published on

திருப்பரங்குன்றம்,

திருப்பரங்குன்றம் மலையில் உள்ள சமணர் படுகைக்கு செல்லும் வழியை திறக்க சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வழிபாட்டு தலம்

திருப்பரங்குன்றம் மலையின் மேற்கு பகுதியில் கல்வெட்டு குகைக் கோவில் அமைந்துள்ளது. இந்த கல்வெட்டு கோவிலானது பாண்டியர் காலத்தை சேர்ந்தது. கிழக்கு நோக்கி சிறிய கருவறையும் தெற்கு நோக்கிய முன் மண்டபத்துடன் காணப்படுகிறது. கருவறையில் அர்த்த நாரீஸ்வரரும், முன்மண்டபத்தில் நடராஜர், வள்ளி தெய்வானை சிற்பங்கள் உள்ளன. மேலும் கல்வெட்டுகள் உள்ளன. இந்த கல்வெட்டு குகை கோவில் இந்திய தொல்லியியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.

இதேபோல கிரிவலப்பாதையில் அரசு மருத்துவமனை வளாகத்தில் மலைமேல் சுமார் 150 அடி உயரத்தில் மலை குகைகளில் இயற்கையாக சமணர் படுகைகள் அமைந்து உள்ளது. அதில் பெரிய குகை தளத்தில் கற்படுகைகளும், தமிழ் பிராமி கல்வெட்டுகளும் உள்ளன. சிறிய குகையானது சமணர் படுகைகளாக கொண்டுள்ளது.

பாதுகாப்பு

இதுவும் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. சமணர் படுகை மற்றும் கற்படுகைக்கு சென்று வருவதற்கு மலையிலேயே படிக்கட்டுபாதை அமைக்கப்பட்டு உள்ளது.

சமணர் படுகை இருப்பது பெரும்பாலான உள்ளூர் பொதுமக்களுக்கு தெரியாத நிலையே இருந்து வருகிறது. இதேபோல கல்வெட்டு குகை கோவிலின் முக்கியத்துவம் சுற்றுலா பயணிகளுக்கு கொண்டு செல்லாத நிலை இருந்து வருகிறது.

மேலும் இங்கு மின்விளக்கு வசதி இல்லாத பெரும் குறையும் உள்ளது. சுற்றுலா பயணிகள் வந்து செல்லுவதற்கு ஏற்ப அனைத்து வசதிகள் ஏற்படுத்த சுற்றுலாத்துறையினர் முன்வரவேண்டும். கல்வெட்டு குகை கோவில் பாதுகாப்பு பணிக்கு ஊழியர் இருப்பதுபோல சமணர் படுகை பாதுகாப்பு பணிக்கு என்று தனியாக ஊழியர் நியமிக்கப்பட வேண்டும்.

பிரதான வழி

மேலும் சமணர் படுகைக்கு சென்று வர மிக சிறிய, குறுகிய பாதை திறந்து உள்ளது. ஆனால் அது இருப்பது பெரும் பாலானோருக்கு தெரியவில்லை. சமீபத்தில் சுற்று சுவர் கட்டப்பட்டு பெரிய வழி அமைக்கப்பட்ட போதிலும் பிரதான பாதையின் வழி பூட்டப்பட்டு உள்ளது.

அதை உரிய நேரத்திற்கு திறந்து வைக்க வேண்டும். மேலும் சமணர் படுகைகள் மற்றும் கல்வெட்டு குகை கோவில் பற்றி சுற்றுலாபயணிகள் அறிந்துகொள்ள சுற்றுலா நகரங்களில் அறிவிப்பு பலகைகள் வைப்பதோடு விழா காலங்களில் சுற்றுலா பயணிகள் வந்து செல்ல ஏற்பாடு செய்யப்பட வேண்டும். அப்போதுதான் சமணர் படுகைகள் மற்றும் கல்வெட்டு கோவில் வரலாறு தெரிந்துகொள்ள வாய்ப்பாக அமையும் என்று சுற்றுலா பயணிகள் தெரிவிக்கின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com