மயிலாப்பூர் தொகுதி மக்கள் கோரிக்கை மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை - அரசு அதிகாரிகளுக்கு அமைச்சர் வெங்கடரமணன் உத்தரவு

பள்ளி கட்டட வசதிகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் குறித்து அமைச்சர் வெங்கடரமணன் ஆய்வு மேற்கொண்டார்.
உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் ப.வெங்கடரமணன்
Published on

சென்னை,

பெருநகர சென்னை மாநகராட்சி செய்தி வெளியீடு

கலந்தாய்வு கூட்டம்

உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் ப.வெங்கடரமணன் தலைமையில், மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடனான கலந்தாய்வு கூட்டம் இன்று நடைபெற்றது.

வளர்ச்சி திட்டப்பணிகள்

உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் ப.வெங்கடரமணன் தலைமையில், மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடனான கலந்தாய்வு கூட்டம் தேனாம்பேட்டை மண்டலம், கே.பி.தாசன் சாலையில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் நடைபெற்றது.

சென்னை மாநகராட்சி

உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர், மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பெருநகர சென்னை மாநகராட்சி, தேனாம்பேட்டை மண்டலம், வார்டு-122, 123, 124, 125, 126 மற்றும் 171 ஆகிய பகுதிகளில் மாநகராட்சி மூலமாக மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால், சாலை, பூங்கா, கட்டடங்கள், விளையாட்டு மைதானங்கள், தெருமின் விளக்குகள், பொதுசுகாதாரம், அம்மா உணவகங்கள், திடக்கழிவு மேலாண்மை, மயானபூமி உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருவது தொடர்பாக தொடர்புடைய துறை அலுவலர்களுடன் விரிவாக ஆய்வு மேற்கொண்டார். சென்னை பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் விவரம், பள்ளியின் எண்ணிக்கை, ஆசிரியர்கள் மற்றும் தலைமையாசிரியர்கள், புதிதாக மாணவர் சேர்க்கைக்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள், பள்ளி கட்டட வசதிகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.

சென்னை குடிநீர் வாரியம்

பின்னர், சென்னை குடிநீர் வாரியத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் குடிநீர் திட்டப்பணிகள், பாதாள சாக்கடை திட்டப்பணிகள், நீரேற்று நிலையங்கள், கழிவுநீரேற்று நிலையங்கள் குறித்தும், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பு விவரங்கள், அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் ஏற்படுத்துதல், கூடுதலாக குடியிருப்புகள் கட்டுவது தொடர்பாக சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார்.

மின்சார வாரியம்

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள மின்மாற்றிகள் விவரங்கள், கூடுதலாக தேவைப்படும் மின்மாற்றிகள் குறித்த விவரங்களைக் கேட்டறிந்து ஆய்வு மேற்கொண்டார். நெடுஞ்சாலைத்துறை மற்றும் பொதுப்பணித்துறையின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்தும், மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதியில் மேற்கொள்ளப்பட வேண்டிய வளர்ச்சி திட்ட பணிகள் குறித்தும் விரிவாக ஆய்வு செய்தார்.

நடைபெற்று வரும் அனைத்து பணிகளையும் குறித்த காலத்திற்குள் முடித்திடவும், பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது தொடர்புடைய துறை அலுவலர்கள் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளவும், சுகாதார பணிகளுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து தூய்மை பணிகளை மேற்கொள்ளவும், பெண்கள் பாதுகாப்பு உள்ளிட்ட சட்டம், ஒழுங்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

இக்கூட்டத்தில், துணை ஆணையாளர் (பணிகள்) வி.சிவகிருஷ்ணமூர்த்தி, இ.ஆ.ப., சென்னை பெருநகர காவல் கூடுதல் ஆணையாளர் (தெற்கு) க.ச.நரேந்திரன் நாயர், இ.கா.ப., காவல் இணை ஆணையாளர் பண்டி கங்காதர், இ.கா.ப., (கிழக்கு), காவல் துறை ஆணையாளர் (மயிலாப்பூர்) கார்த்திக் மற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com