சென்னையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் செயல்முறை விளக்கம் - மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

சென்னையின் 16 தொகுதிகளிலும் செயல்முறை விளக்க மையங்கள் இன்று முதல் அமைக்கப்பட்டுள்ளன.
சென்னை,
சென்னையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் சரிபார்க்கும் கருவியின் செயல்முறை விளக்கத்தை மாநகராட்சி ஆணையாளர் ஜெ.குமரகுரபரன் நேரில் ஆய்வு செய்தார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-
“இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, நடைபெறவுள்ள 2026 தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தலை முன்னிட்டு, சென்னை மாவட்டத்திற்குட்பட்ட 16 சட்டமன்றத் தொகுதிகளிலும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்காளர் தாம் அளித்த வாக்கினை சரிபார்க்கும் கருவியினை பயன்படுத்துவது குறித்த செயல்முறை விளக்க மையங்கள் இன்று (21.01.2026) முதல் அமைக்கப்பட்டுள்ளன.
இதன் ஒரு பகுதியாக, பெருநகர சென்னை மாநகராட்சியின் தலைமையிடமான ரிப்பன் கட்டிடத்தின் வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு மற்றும் சரிபார்க்கும் கருவியின் வாயிலாக வாக்காளர்களுக்கு வழங்கப்படும் செயல்முறை விளக்கத்தினை மாவட்ட தேர்தல் அலுவலர்/மாநகராட்சி ஆணையாளர் ஜெ.குமரகுரபரன் இன்று (21.01.2026) பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது மாவட்ட தேர்தல் அலுவலர்/இணை ஆணையாளர் (கல்வி) க.கற்பகம் உடன் இருந்தார்.”
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






