கஜா புயல் பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய சென்னையில் இருந்து ரயிலில் நாகை புறப்பட்டார் முதலமைச்சர் பழனிச்சாமி

கஜா புயல் பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய, முதலமைச்சர் பழனிச்சாமி சென்னையில் இருந்து ரயிலில் நாகை புறப்பட்டு சென்றார்.
கஜா புயல் பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய சென்னையில் இருந்து ரயிலில் நாகை புறப்பட்டார் முதலமைச்சர் பழனிச்சாமி
Published on

சென்னை,

தமிழகத்தில் கடந்த 16ந்தேதி டெல்டா பகுதியில் உள்ள 12 மாவட்டங்களில் கஜா புயல் பெரும் பாதிப்பினை ஏற்படுத்தியது. இதில் புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய 4 மாவட்டங்கள் பெரும் பாதிப்பினை சந்தித்தன.

இதனால் டெல்டா விவசாயிகள் தங்களது வாழ்வாதாரத்தை தொலைத்து தவிக்கின்றனர். மின் விநியோக சீரமைப்பு, மரங்களை அப்புறப்படுத்தும் பணி தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. மேலும் ஏராளமானோர் தங்கள் வீடுகளையும் உடைமைகளையும் இழந்து முகாம்களில் தங்கியுள்ளனர்.

தமிழகத்தின் பல்வேறு தரப்பினரிடம் இருந்து நிவாரணப்பொருட்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நிவாரணப்பணிக்காக ரூ.1000 கோடி ஒதுக்கி உத்தரவிட்டார். கடந்த முறை முதலமைச்சர் மேற்கொண்ட கஜா புயல் ஆய்வுப் பயணம் மழையின் காரணமாக பாதியில் நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் நாளை நாகை மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் முதலமைச்சர் ஆய்வு மேற்கொள்ள உள்ளார். இதற்காக சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து இன்று இரவு காரைக்கால் விரைவு ரயிலில் நாகை புறப்பட்டார்.

முதலமைச்சருடன் தலைமைச்செயலாளர், டி.ஜி.பி உட்பட அரசு அதிகாரிகள் உடன் சென்றனர். நாளை காலை நாகை மாவட்டத்திலும், பிற்பகலில் திருவாரூர் மாவட்டத்திலும் ஆய்வு நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com