

ஈரோடு,
தமிழ்நாட்டின் பாரம்பரிய பனை தயாரிப்புகளுக்கு சர்வதேச அளவில் பெரும் அங்கீகாரம் கிடைத்துள்ளது. ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் இருந்து ஐரோப்பிய நாடான பல்கேரியாவுக்கு முதன்முறையாக பனை வெல்லத்தூள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும், வேளாண் மற்றும் பதனப்படுத்தப்பட்ட உணவு பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–
இந்தியாவின் பாரம்பரிய பனை சார்ந்த தயாரிப்புகளை உலக நாடுகளின் சந்தைகளுக்கு கொண்டு செல்ல மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் இருந்து பல்கேரியா நாட்டின் வார்னா நகருக்கு 1.755 மெட்ரிக் டன் எடையுள்ள இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட பனை வெல்லத்தூள் (பனை மலர் தேனிலிருந்து தயாரிக்கப்பட்டது) முதன்முறையாக நேற்று வெற்றிகரமாக ஏற்றுமதி செய்யப்பட்டது.
ஈரோடு பகுதியில் சுமார் 137 ஏக்கர் பரப்பளவில் இந்த பனை மரங்கள் இயற்கை முறையில் சாகுபடி செய்யப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்த இயற்கை சாகுபடி திட்டம், தமிழ்நாட்டின் பாரம்பரிய பனை தயாரிப்புகளுக்கான சர்வதேச சந்தை வாய்ப்புகள் அதிகரித்துள்ளது.
உள்நாட்டுச் சந்தையோடு ஒப்பிடும்போது, இந்த வெளிநாட்டு ஏற்றுமதி மூலம் விவசாயிகளுக்கு 15 முதல் 22 சதவீதம் வரையிலும், உற்பத்தி செய்யும் உற்பத்தியாளர்களுக்கு 17 சதவீதம் வரையிலும் கூடுதல் வருவாய் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த ஏற்றுமதி நாட்டின் இயற்கை விவசாயிகளிடையே பெரும் மகிழ்ச்சியையும், புதிய நம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.