இந்தியாவில் தோல் பொருட்களின் ஏற்றுமதி அதிகரிப்பு


இந்தியாவில் தோல் பொருட்களின் ஏற்றுமதி அதிகரிப்பு
x

தமிழகத்தில் 3 மாவட்டங்களில் தோல் தொழிற்சாலைகள் அதிகம் செயல்பட்டு வருகின்றன.

சென்னை,

இந்தியாவுக்கு பெருமளவில் அன்னிய செலாவணியை ஈட்டித்தருவதில் தோல் பொருட்கள் சிறப்பிடம் பெறுகிறது. உலக அளவில் தோல் பொருட்கள் உற்பத்தியில் இந்தியா மிக முக்கிய பங்கு வகிக்கிறது. குறிப்பாக தமிழகத்தில் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் தோல் தொழிற்சாலைகள் அதிகம் செயல்பட்டு வருகின்றன.

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் ராணிப்பேட்டை, பேராணம்பட்டு, ஆம்பூர், வாணியம்பாடி ஆகிய பகுதிகளில் அதிக அளவில் தோல் பொருட்கள் உற்பத்தி நிறுவனங்கள் உள்ளன. இங்கு தயாராகும் ஷூ, கையுறைகள், தோல் பைகள் உள்ளிட்ட பொருட்களுக்கு வெளிநாடுகளில் அதிக மவுசு உள்ளது. எனவே பல்வேறு நாடுகளுக்கும் ஏற்றுமதி ஆகிறது.

இந்தியாவில், கடந்த 2023-2024-ம் நிதியாண்டில் பதனிடப்பட்ட தோல் ஏற்றுமதி மூலம் 445.41 மில்லியன் டாலரும், தோல் காலணிகள் மூலம் 2,002.38 மில்லியன் டாலரும், காலணி உதிரி பாகங்கள் மூலம் 258.92 மில்லியன் டாலரும், தோல் ஆடைகள் மூலம் 339.47 மில்லியன் டாலரும் கிடைத்துள்ளன.

அதேபோல தோல் பொருட்கள் 1,232.84 மில்லியன் டாலரும், குதிரை சேணம் மற்றும் கட்டுப்பாட்டு உபகரணங்கள் 182.17 மில்லியன் டாலரும், தோல் அல்லாத காலணிகள் 226.56 மில்லியன் டாலரும் என அந்த நிதியாண்டில் மொத்தம் 4,687.75 மில்லியன் டாலருக்கு ஏற்றுமதி நடைபெற்று உள்ளது.

2024-2025-ம் நிதியாண்டில் பதனிடப்பட்ட தோல் பொருட்கள் மூலம் 445.32 மில்லியன் டாலரும், தோல் காலணிகள் மூலம் 2,007.76 மில்லியன் டாலரும், காலணி உதிரி பாகங்கள் 244.17 மில்லியன் டாலரும், தோல் ஆடைகள் 353.82 மில்லியன் டாலரும், தோல் பொருட்கள் 1,319.6 மில்லியன் டாலரும், குதிரை சேணம் மற்றும் கட்டுப்பாட்டு உபகரணங்கள் 205.39 மில்லியன் டாலரும், தோல் அல்லாத காலணிகள் 252.91 மில்லியன் டாலரும் என மொத்தம் 4,828.97 மில்லியன் டாலருக்கு ஏற்றுமதி நடைபெற்று உள்ளது.

குறிப்பாக 2025-ம் ஆண்டு ஏப்ரல்-அக்டோபர் வரையிலான கால கட்டத்தில் பதனிடப்பட்ட தோல் 231.18 மில்லியன் டாலரும், தோல் காலணிகள் 1,182.79 மில்லியன் டாலரும், காலணி உதிரி பாகங்கள் 165.82 மில்லியன் டாலரும், தோல் ஆடைகள் 250.91 மில்லியன் டாலரும், தோல் பொருட்கள் 765.91 மில்லியன் டாலரும், சேணம் மற்றும் கட்டுப்பாட்டு உபகரணங்கள் 136.34 மில்லியன் டாலரும், தோல் அல்லாத காலணிகள் 146.35 மில்லியன் டாலரும் என மொத்தம் 2,879.30 மில்லியன் டாலருக்கு ஏற்றுமதி நடைபெற்று உள்ளது.

இதன் மூலம் 2023-24-ம் நிதியாண்டை விட 2024-25-ம் நிதியாண்டில் தோல் தொழில் வர்த்தகம் 3 சதவீதம் அதிகரித்து உள்ளது. 2025-ம் ஆண்டு ஏப்ரல் முதல் அக்டோபர் வரை தோல் தொழில் வர்த்தகத்தில் பதனிடப்பட்ட தோல், காலணி உதிரி பாகங்கள் ஆகியவற்றின் ஏற்றுமதி சரிந்து இருந்தாலும், தோல் காலணிகள், தோல் ஆடைகள், தோல் பொருட்கள், குதிரை சேணம் மற்றும் கட்டுப்பாட்டு உபகரணங்கள், தோல் அல்லாத காலணிகள் ஏற்றுமதி அதிகரித்து உள்ளது.

இதன் மூலம் அமெரிக்க வரி விதிப்பையும் தாண்டி தோல் பொருட்களின் ஏற்றுமதி 0.4 சதவீதம் அதிகரித்து உள்ளது. இந்த தகவலை இந்திய தோல் ஏற்றுமதி கவுன்சில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

1 More update

Next Story