சீமைக்கருவேல மரங்களை வெட்ட விதிக்கப்பட்ட தடை நீட்டிப்பு: சென்னை உயர் நீதிமன்றம்

சீமைக்கருவேல மரங்களை வெட்ட விதிக்கப்பட்ட தடை நீட்டிக்கப்படுவதாக சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சீமைக்கருவேல மரங்களை வெட்ட விதிக்கப்பட்ட தடை நீட்டிப்பு: சென்னை உயர் நீதிமன்றம்
Published on

சென்னை,

தமிழகத்தில் உள்ள சீமை கருவேலம் மரத்தினால், நிலத்தடி நீர் கடுமையாக பாதிக்கப்படுவதாக ஐகோர்ட்டு மதுரை கிளையில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு டிவிசன் பெஞ்ச், சீமை கருவேலம் மரங்களை வெட்டுவதற்கு உத்தரவிட்டது.

இந்த நிலையில், இந்த உத்தரவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், வக்கீல் வி.மேகநாதன் என்பவர் பொது நல மனு தாக்கல் செய்தார்.தனது மனுவில், அறிவியல்பூர்வமான ஆய்வுகளை மேற்கொண்ட பின்னரே, இந்த மரங்களை வெட்டவேண்டும். இந்த மரம் தடை செய்யப்பட்டது என்று அறிவிக்கும் விதமாக எந்த ஒரு சட்டமும் இல்லை. அதனால், இந்த மரத்தை அகற்ற வேண்டும் என்று ஐகோர்ட்டு மதுரை கிளை பிறப்பித்த உத்தரவு சட்டப்பூர்வமானது கிடையாது. இந்த உத்தரவின் காரணமாக, தற்போது உள்ள சுற்றுச்சூழலுக்கும், இந்த மரத்தை சார்ந்து இருக்கும் மக்களுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. எனவே, இந்த சீமை கருவேலம் மரத்தை வெட்ட தடை விதிக்கவேண்டும் என கோரியிருந்தார்.

இந்த வழக்கை கடந்த ஏப்ரல் 27-ந் தேதி விசாரித்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர், இந்த வழக்கை கோடை விடுமுறை காலத்தில் அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்றும் கருவேலம் மரத்தை வெட்டவேண்டும் என்று ஐகோர்ட்டு மதுரை கிளையில் 2 நீதிபதிகள் கொண்ட டிவிசன் பெஞ்ச் உத்தரவிட்டதால், இந்த உத்தரவை எதிர்க்கும் இந்த வழக்கை 3 நீதிபதிகள் கொண்ட முழு பெஞ்சு விசாரிக்கும் என்று உத்தரவிட்டனர்.

மேலும், மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை சீமை கருவேலம் மரத்தை வெட்ட தடை விதிப்பதாகவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.இதன்படி இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதிகள் எம்.சுந்தர், எம்.எஸ்.ரமேஷ் ஆகியோர் இந்த வழக்கை விசாரித்தார்கள்.அப்போது அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல் அய்யாதுரை, தமிழக அரசு ஒரு நிபுணர்கள் குழுவை அமைத்துள்ளது. தமிழ்நாடு வனத்துறை தலைமை பாது காவலர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இந்த குழுவில் 7 பேர் உறுப்பினராக உள்ளனர்.

இவர்கள் சீமை கருவேலம் மரம் குறித்து அறிவியல் பூர்வமாக ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்வார்கள். அதன்பின்னரே சீமை கருவேலம் மரத்தை வெட்டுவது குறித்து முடிவு செய்யப்படும். இந்த அறிக்கை தாக்கல் செய்யும் வரை இந்த மரம் தமிழகத்தில் எந்த ஒரு பகுதியிலும் வெட்டப்படாது என்று உத்தரவாதம் அளித்தார்.மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல் மோகன், தமிழக அரசு, நிபுணர்கள் குழு அமைத்தால், அந்த குழுவில் எங்கள் தரப்பில் 4 நிபுணர்களையும் சேர்த்துக் கொள்ளவேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், மனுதாரர் தரப்பில் பரிந்துரை செய்யப்படும் 4 நிபுணர்களையும், நிபுணர்கள் குழுவில் தமிழக அரசு இடம் பெற செய்யவேண்டும். இதற்கான உத்தரவை தமிழக அரசு பிறப்பிக்கவேண்டும். இந்த வழக்கு விசாரணையை ஜூலை 5-ந்தேதிக்கு தள்ளி வைக்கிறோம். அதுவரை, தமிழகத்தில் சீமை கருவேலம் மரத்தை அகற்ற விதிக்கப்பட்ட தடையை நீட்டித்து உத்தரவிடுகிறோம் என்று உத்தரவிட்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com