சேலம் வழியாக இயக்கப்படும் ஹூப்ளி-கொல்லம் சிறப்பு ரெயில் சேவை நீட்டிப்பு

டிசம்பர், ஜனவரி மாதம் வரையிலும் நீட்டிப்பு செய்து தெற்கு ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
சேலம் வழியாக இயக்கப்படும் ஹூப்ளி-கொல்லம் சிறப்பு ரெயில் சேவை நீட்டிப்பு
Published on: 

சேலம்,

சேலம் வழியாக இயக்கப்படும் ஹூப்ளி-கொல்லம் சிறப்பு ரெயில் சேவை ஜனவரி மாதம் வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.

ஹூப்ளி-கொல்லம் சிறப்பு ரெயில்

கர்நாடக மாநிலம் ஹூப்ளியில் இருந்து கேரளம் மாநிலம் கொல்லத்திற்கு சேலம். ஈரோடு, திருப்பூர், போத்தனூர் வழியாக வாராந்திர சிறப்பு ரெயில் (வண்டி எண்-07313, 07314) இருமார்க்கத்திலும் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயிலின் இயக்க காலம் இந்த மாதத்துடன் முடிவடைய இருந்த நிலையில் மேலும், 2 மாதங்களுக்கு அதாவது டிசம்பர், ஜனவரி மாதம் வரையிலும் நீட்டிப்பு செய்து தெற்கு ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

அதன்படி ஹூப்ளி-கொல்லம் சிறப்பு ரெயில் (வண்டி எண்-07313) வரும் டிசம்பர் 6-ந் தேதி முதல் ஜனவரி 17-ந் தேதி வரை ஞாயிற்றுக்கிழமை தோறும் (7 சேவை) நீட்டித்து இயக்கப்படுகிறது. ஹூப்ளியில் பிற்பகல் 3.15 மணிக்கு புறப்பட்டு காவேரி, பிரூர், தும்கூர், பெங்களூரு, கிருஷ்ணராஜபுரம், பங்காருபேட்டை வழியாக சேலத்திற்கு அடுத்த நாள் அதிகாலை 3.07 மணிக்கு வந்து சேரும்.

அதன்பிறகு ஈரோட்டிற்கு அதிகாலை 4.50 மணிக்கும். திருப்பூருக்கு அதிகாலை 4.53 மணிக்கும், போத்தனூருக்கு அதிகாலை 5.48 மணிக்கும் சென்றடையும். அதன்பிறகு பாலக்காடு, திருச்சூர், ஆலுவா, எர்ணாகுளம் டவுன், கோட்டயம் வழியாக கொல்லத்திற்கு மதியம் 1.15 மணிக்கு சென்றடைகிறது.

மறுமார்க்கம்

அதேபோல், மறுமார்க்கத்தில் கொல்லம்-ஹூப்ளி சிறப்பு ரெயில் (வண்டி எண்-07314) வருகிற டிசம்பர் 7-ந் தேதி முதல் ஜனவரி 18-ந் தேதி வரை திங்கட் கிழமை தோறும் (7 சேவை) இயக்கப்படுகிறது. கொல்லத்தில் மாலை 5 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் போத்தனூருக்கு அடுத்தநாள் அதிகாலை 1.18 மணிக்கும், திருப்பூருக்கு அதிகாலை 2.18 மணிக்கும், ஈரோட்டிற்கு அதிகாலை 3.10 மணிக்கும், சேலத்திற்கு அதிகாலை 4.05 மணிக்கும் வந்தடைகிறது. அதன்பிறகு பங்காருபேட்டை, பெங்களூரு வழியாக ஹூப்ளிக்கு மாலை 6.30 மணிக்கு செல்லும். இந்த ரெயில் சேவையை பயணிகள் பயன்படுத்திக்கொள்ளுமாறு தெற்கு ரெயில்வே நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

X