இரவு நேர ஊரடங்கு 31-ந் தேதி வரை நீட்டிப்பு - தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடுகள்

தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு 31-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. கூடுதல் கட்டுப்பாடுகளையும் அரசு விதித்து இருக்கிறது.
இரவு நேர ஊரடங்கு 31-ந் தேதி வரை நீட்டிப்பு - தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடுகள்
Published on

சென்னை,

தமிழகத்தில் கொரோனா பரவல் மின்னல் வேகத்தில் அதிகரித்து வருகிறது.

இதைத்தொடர்ந்து கடந்த 6-ந் தேதி முதல் ஏற்கனவே இருந்து வரும் கட்டுப்பாடுகளுடன் இரவு நேர ஊரடங்கும் பிறப்பிக்கப்பட்டது. 9-ந் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

மு.க.ஸ்டாலின் ஆலோசனை

கொரோனா பரவல் தொடர்ந்து எகிறி வருவதால் ஊரடங்கு கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்துவது தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் மருத்துவ நிபுணர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினார்.

இந்த கூட்டத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன், தலைமை செயலாளர் வெ.இறையன்பு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், டி.ஜி.பி. சைலேந்திரபாபு, உலக சுகாதார நிறுவனத்தின் முதுநிலை ஆராய்ச்சியாளர் டாக்டர் சவுமியா சுவாமிநாதன் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

இதைத்தொடர்ந்து புதிய கட்டுப்பாடுகளை விதித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

31-ந் தேதி வரை இரவு நேர ஊரடங்கு

கொரோனா நோய் தொற்று பரவலை தடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையிலும், பரவி வரும் உருமாறிய கொரோனா - ஒமைக்ரான் வைரஸ் நோயைக் கருத்தில் கொண்டும், பொது மக்கள் நலன் கருதியும் எதிர்வரும் பண்டிகை காலத்தில் பொதுமக்கள் ஒரே நேரத்தில், ஒரே இடத்தில் கூட்டம் கூடுவதால் நோய்த் தொற்று பரவல் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக, மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

எனவே, தற்போது நடைமுறையில் இருந்து வரும் இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட அனைத்து கட்டுப்பாடுகளும் 31-ந் தேதி வரை அமலில் இருக்கும். இவை தவிர்த்து பின்வரும் கூடுதல் கட்டுப்பாடுகளும் நடைமுறைப்படுத்தப்படும்.

வழிபாட்டு தலங்களில் அனுமதி இல்லை

* 14-ந் தேதி முதல் 18-ந் தேதி வரை அனைத்து வழிபாட்டு தலங்களிலும் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை.

* 16-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) முழு ஊரடங்கு.

* பொங்கல் பண்டிகைக்காக வெளியூர் செல்லும் பொதுமக்கள் நலன் கருதி பொது பேருந்துகளில் அனுமதிக்கப்பட்ட இருக்கைகளில் 75 சதவீத இருக்கைகளில் மட்டும் பயணிக்க அனுமதிக்கப்படுவர்.

* தற்போது ஊரடங்கு காலங்களில் தடை செய்யப்பட்ட மற்றும் அனுமதிக்கப்பட்ட இதர செயல்பாடுகள் தொடர்ந்து அமலில் இருக்கும்.

குளிர்சாதன வசதி கூடாது

கொரோனாவை கட்டுப்படுத்த பொதுவான சில அறிவுரைகளை பின்பற்ற பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இதுவரை தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். முதல் தவணை தடுப்பூசி செலுத்தியிருந்து, 2-ம் தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள் உடனடியாக 2-ம் தவணை தடுப்பூசியையும் செலுத்திக்கொள்ள வேண்டும்.

வணிக வளாகங்கள் மற்றும் கடைகளில் பணிபுரிபவர்கள், உரிமையாளர்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்தியதற்கான சான்று வைத்திருக்க வேண்டும்.

அனைத்து கடைகளிலும் குளிர்சாதன வசதியை தவிர்க்க வேண்டும்.

அபராதம் விதிக்கப்படும்

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, நோய்த்தொற்று பாதிப்பிற்குள்ளானவர்கள் உள்ள பகுதிகளில், நோய்க் கட்டுப்பாட்டு மண்டல எல்லைகளை நுண்ணளவு வரை வரையறை செய்து, நிலையான வழிகாட்டு நடைமுறைகளின்படி, தீவிரமாக நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை மாவட்ட கலெக்டர் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் மேற்கொள்ள வேண்டும்.

நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் அத்தியாவசிய செயல்பாடுகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட வேண்டும். இங்கு மருத்துவ அவசர சேவைகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் வழங்குதல் தவிர, இதர செயல்பாடுகளுக்கு அனுமதி இல்லை.

நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளில் நோய் தொற்று பரவலை வீடு, வீடாக கண்காணிக்கப்படும். கொரோனா கட்டுப்பாடுகளை மீறும் நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் மீது நடவடிக்கை எடுத்து அபராதம் விதிக்கப்படும்.

அச்சம் கொள்ள வேண்டாம்

தற்போது கொரோனா வேகமாக பரவி வருவதால், பொது இடங்களில் கொரோனா தடுப்பு நடைமுறைகள் கட்டாயம் பின்பற்றப்படுவதை பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர், அனைத்து மாவட்ட கலெக்டர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் உறுதிப்படுத்த வேண்டும். தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் ஆகியவற்றில் கொரோனா நோய் தடுப்பு நடைமுறைகள் பின்பற்றப்படுவதை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.

கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாமல் செயல்படும் வணிக நிறுவனங்கள், கடைகளை மூட பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் மற்றும் மாவட்ட கலெக்டர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கொரோனா தொற்று அதிகரித்து வந்தாலும், உரிய சிகிச்சை அளித்திட தேவையான மருத்துவ கட்டமைப்புகள் தயார் நிலையில் உள்ளதால் பொதுமக்கள் அச்சம் கொள்ள வேண்டாம்.

கொரோனா தொற்றில் இருந்து மக்களை காத்திட அரசு மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் முழு ஒத்துழைப்பு அளிக்க கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com