பிறப்பு சான்றிதழில் குழந்தையின் பெயரை சேர்க்க கால அவகாசம் நீட்டிப்பு - சென்னை மாநகராட்சி தகவல்

பெருநகர சென்னை மாநகராட்சியில் குழந்தைகளுக்கு பெயர் சேர்த்தலை கட்டணமின்றி மேற்கொள்ளலாம்.
பிறப்பு சான்றிதழில் குழந்தையின் பெயரை சேர்க்க கால அவகாசம் நீட்டிப்பு - சென்னை மாநகராட்சி தகவல்
Published on

சென்னை,

சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-

பிறப்பு பதிவு குழந்தையின் முதல் உரிமை. பிறப்பு சான்றிதழ் குழந்தையின் சட்ட பூர்வ குடியுரிமைக்கான சான்றாகும்.

குழந்தை பிறந்த 21 நாட்களுக்குள் பிறப்பை பதிவு செய்து இலவச பிறப்பு சான்றிதழ் பெற பிறப்பு இறப்பு பதிவு சட்டம் மற்றும் பிறப்பு இறப்பு பதிவு திருத்த சட்டம் வழி வகை செய்கிறது. பிறப்பு சான்றிதழில் குழந்தையின் பெயரை பதிவு செய்தால் மட்டுமே அது முழுமையான பிறப்பு சான்றிதழ் ஆகும்.

ஒரு குழந்தையின் பிறப்பு, பெயரின்றி பதிவு செய்யப்பட்டிருப்பின் அந்த குழந்தையின் பிறப்பு பதிவு செய்யப்பட்ட நாளிலிருந்து 12 மாதத்துக்குள் குழந்தையின் பெற்றோர் அல்லது காப்பாளர் எழுத்து வடிவிலான உறுதி மொழியை சம்பந்தப்பட்ட பிறப்பு இறப்பு பதிவாளரிடம் அளித்து எந்த வித கட்டணமின்றி பெயர் பதிவு செய்திடலாம். 12 மாதங்களுக்கு பின்னர் குழந்தையின் பெயரை 15 ஆண்டுகளுக்குள் உரிய கால தாமதகட்டணம் ரூ.200 செலுத்தி பதிவு செய்திட பிறப்பு இறப்பு பதிவுச் சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. எனவே, பெருநகர சென்னை மாநகராட்சியில் குழந்தைகளுக்கு பெயர் சேர்த்தலை கட்டணமின்றி மேற்கொள்ளலாம்.

பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமங்களை கலைந்திட பிறப்பு பதிவு செய்து 15 ஆண்டு கால அளவு முடிவுற்றும் பெயர் பதிவு செய்யாமல் உள்ள அனைத்து பிறப்பு பதிவுகளுக்கும் பெயர் பதிவு செய்திட 26.09.2026 வரை கால அவகாசம் தமிழ்நாடு அரசினால் வழங்கப்பட்டுள்ளது.

இக்கால நிர்ணயம் வருகின்ற 26.09.2026 தேதியுடன் முடிவடைய உள்ளது. எனவே பெருநகர சென்னை மாநகராட்சியில் பதிவு செய்யப்பட்டுள்ள பிறப்புகளில் 15 ஆண்டுகள் முடிவுற்றும் பெயர் பதிவு செய்யாமல் இருப்பின், பிறப்பு சான்றிதழ் நகல், பள்ளி கல்லூரி சான்றிதழ், ஆதார் கார்டு நகல், வாக்காளர் அடையாள அட்டை நகல், ரேஷன் கார்டு உள்ளிட்ட ஆவணங்களுடன் பெருநகர சென்னை மாநகராட்சி பிறப்பு இறப்பு பதிவு அலுவலகத்தில்/ 1 முதல் 15 வரையிலான மண்டலங்களில் உள்ள மண்டல அலுவலகங்களில் விண்ணப்பித்து பெயருடன் கூடிய பிறப்பு சான்றிதழை பெற்று பயன் பெறலாம்.

எனவே இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி இது வரை பதிவு செய்யப்பட்ட குழந்தைகளின் பிறப்பு சான்றிதழ்களில் பெயர் சேர்க்க விரும்புவோர் பெருநகர சென்னை மாநகராட்சி அலுவலங்களில் தகுந்த ஆவணங்களுடன் 26.09.2026 ற்குள் பதிவு செய்து பெயருடன் கூடிய பிறப்பு சான்றிதழை பெற்று பயனடைய கேட்டுக் கொள்ளப்படுகிறது என மாநகராட்சி ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com