மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் இணைக்க கால அவகாசம் நீட்டிப்பு

மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வரும் 28-ம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு செய்து அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார்.
மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் இணைக்க கால அவகாசம் நீட்டிப்பு
Published on

சென்னை,

தமிழகத்தில் 100 யூனிட் இலவச மின்சாரம், 500 யூனிட் மானிய விலை மின்சாரத்தைப் பயன்படுத்தும் மின்நுகர்வோர் 2.67 கோடி பேர் உள்ளனர். இலவசம், மானியம் பெறும் பயனாளிகளின் விவரங்களை ஆதார் எண்ணுடன் இணைக்குமாறு, அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து, இலவசம், மானியம் பெறும் மின் நுகர்வோரின் மின் இணைப்பு எண்ணுடன், ஆதார் எண்ணை இணைக்கும் பணியை தமிழக மின்வாரியம் கடந்த 2022-ம் ஆண்டு நவம்பர் 15-ம் தேதி தொடங்கியது. டிசம்பர் 31-ம் தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டது.

இந்த இணைப்புப் பணிக்காக, தமிழகம் முழுவதும் 2,811 மின்வாரிய பிரிவு அலுவலகங்களில் சிறப்பு கவுன்ட்டர்கள் அமைக்கப்பட்டன. ஆனால், பெரும்பாலான மின்நுகர்வோர் தங்களது ஆதார் எண்ணை, மின் இணைப்பு எண்ணுடன் இணைக்கவில்லை. இதையடுத்து, கூடுதல் காலஅவகாசம் வழங்க வேண்டும் என்ற மின் நுகர்வோரின் கோரிக்கையை ஏற்று, கடந்த ஜனவரி 31-ம் தேதி வரை மின் வாரியம் காலக்கெடுவை நீட்டித்தது. அதன்பிறகு, பிப்ரவரி 15-ம் தேதி (இன்று) வரை நீட்டிக்கப்பட்டது.

நேற்று மாலை வரை 2.59 கோடி மின்நுகர்வோர் தங்களது ஆதார் எண்ணை, மின் இணைப்பு எண்ணுடன் இணைத்துள்ளனர். சுமார்7 லட்சம் பேர் இன்னும் இணைக்கவில்லை.

இந்தநிலையில், அமைச்சர் செந்தில்பாலாஜி செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-

மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இதுவரை 2.80 கோடி பேர் இணைத்துள்ளனர். மின் இணைப்பை ஆதாருடன் இணைக்காமல் இன்னும் 7 லட்சம் பேர் உள்ளனர்.

மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வரும் 28-ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. 7 லட்சம் பேர் இணைக்க வேண்டி இருப்பதால் இன்றுடன் நிறைவடையவிருந்த அவகாசம் வரும் 28-ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது. அதற்கு பின் அவகாசம் வழங்கப்படமாட்டாது.

தொழில்நுட்பம் கோளாறு போன்ற பிரச்சினைகளால் மக்கள் பாதிக்கப்பட்டதால் அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதிமுகவினர் சொல்வதெல்லாம் வேதவாக்கு அல்ல. தோல்வியின் விளிம்பில் உள்ள அதிமுகவினர் விரக்தியில் பேசிக் கொண்டு இருக்கின்றனர் என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com