

திருவண்ணாமலை,
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் சித்ரா பௌர்ணமி பெருவிழாவை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பக்தர்களின் வசதிக்காக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 5,669 சிறப்பு பேருந்துகளும், வெளிமாநிலங்களில் இருந்து சிறப்பு ரெயில்களும் இயக்கப்படுகின்றன.
பாதுகாப்பு பணியில் வடக்கு மண்டல ஐ.ஜி. தலைமையில் 4,250 போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கிரிவல பாதை மற்றும் கோவில் வளாகத்தில் 800-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் பேஸ் டிராக்கர்(Face Tracker) செயலி மூலம் குற்றத்தடுப்பு நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
மேலும் 16 தற்காலிக பேருந்து நிலையங்கள், 90 கார் நிறுத்தும் இடங்கள் மற்றும் 58 மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி பெற்ற 147 இடங்களில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதால் திருவண்ணாமலை நகரம் விழா கோலம் பூண்டுள்ளது.