

திருப்பூர்,
திருப்பூரை சேர்ந்தவர் பனியன் நிறுவன தொழிலாளி ஒருவர், தனது செல்போனில் கிரைண்டர் செயலி மூலம் ஓரின சேர்க்கைக்கு விருப்பம் தெரிவித்து, அதில் உள்ள எண்களை தொடர்பு கொண்டார். அந்த செயலியில் இருந்த நபர்கள், அந்த வாலிபரை அன்று இரவு (கடந்த ஆண்டு ஜூன் மாதம்) தொடர்பு கொண்டு அருகில் இருந்த காட்டுப்பகுதிக்கு வரும்படி ஆசை வார்த்தை கூறி அழைத்தனர்.
அதன்படி அந்த வாலிபர் தனது மோட்டார்சைக்கிளில் அங்கு சென்றார். அங்கு ஏற்கனவே காத்திருந்த 5 சிறுவர்கள் அந்த வாலிபரை தாக்கி அவரிடம் இருந்து மோட்டார்சைக்கிள், செல்போன், ரூ.2 ஆயிரத்தை பறித்துக்கொண்டு விரட்டி விட்டனர். இதனால் பாதிக்கப்பட்ட அந்த வாலிபர் நல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் 15, 16, 17 வயதுடைய சிறுவர்கள் 5 பேரை போலீசார் கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை இளம் சிறார் கோர்ட்டில் நடந்தது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது.
கூட்டுக்கொள்ளை குற்றத்துக்கு 17 வயது, 15 வயது சிறுவர்கள் 2 பேருக்கு 6 மாதம் செங்கல்பட்டில் உள்ள அரசினர் சிறப்பு இல்லத்தில் தங்க வைத்து அவர்களுக்கு செயல்திறன் கவுன்சிலிங் அளிக்கவும், அவர்களின் தகுதி, திறமைக்கு ஏற்ப தொழிற்கல்வி அளிக்க வேண்டும். மீதம் உள்ள 15 வயது, 16 வயதுடைய 3 சிறுவர்களுக்கு திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், தேவையான அளவுக்கு டீன் கவுன்சிலிங்க் அளிக்கவும், இதை திருப்பூர் மாவட்ட குழந்தைகள் நல அலுவலக நன்னடத்தை அலுவலர் அறிக்கை அளிக்கவும், முதன்மை நடுவர் செந்தில்ராஜா, சட்ட உறுப்பினர்கள் முருகேசன், மல்லிகா ஆகியோர் உத்தரவிட்டனர். இந்த வழக்கில் அரசு தரப்பில் அரசு வக்கீல் ஹேமா மகேஸ்வரி ஆஜராகி வாதாடினார்.