

சென்னை,
திருமணத்தை மீறிய உறவு காரணமாக பெற்ற குழந்தைகளுக்கு பாலில் விஷம் கலந்து கொடுத்த பிரியாணி அபிராமிக்கு சென்னை ஐகோர்ட்டு ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் அடுத்த மூன்றாம் கட்டளை பகுதியை சேர்ந்தவர் விஜய். இவர் தனியார் வங்கி ஒன்றில் பணியாற்றி வந்தார். இவரது மனைவி அபிராமி. இந்த தம்பதிக்கு அஜய் என்ற மகனும் கார்னிகா என்ற பெண் குழந்தையும் இருந்தனர்.
டிக் டாக்கில் வீடியோ பதிவிட்டு பிரபலமான அபிராமிக்கு அப்பகுதியில் பிரியாணி கடையில் பணியாற்றி வந்த மீனாட்சி சுந்தரம் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இவர்களது கள்ளக்காதல் விவகாரம் கணவரான விஜய்க்கு தெரியவர அவர் கடுமையாக கண்டித்தார்.
இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அபிராமி, மீனாட்சி சுந்தரத்துடன் சேர்ந்து வாழ முடிவெடுத்து இதற்கு தடையாக உள்ள கணவன் மற்றும் குழந்தைகளை கொலை செய்ய முடிவு செய்தார். கடந்த 2018-ம் ஆண்டு தனது 2 குழந்தைகள் மற்றும் கணவருக்கு பாலில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்துள்ளார்.
இதில் அதிர்ஷ்டவசமாக விஜய் உயிர் தப்பினார். இருப்பினும் 2 குழந்தைகளும் உயிரிழந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக கணவர் விஜய் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அபிராமியை தேடிவந்தனர். அப்போது கள்ளக்காதலன் மீனாட்சி சுந்தரத்துடன் தப்பி செல்ல முயன்ற அபிராமியை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் வைத்து கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.
இச்சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. குழந்தைகளை கொன்ற வழக்கில் குன்றத்தூர் அபிராமிக்கும் கள்ளக்காதலன் மீனாட்சி சுந்தரத்திற்கும் சாகும் வகை சிறை தண்டனை என காஞ்சிபுரம் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இதை எதிர்த்து மேல்முறையீடு செய்த அபிராமி தனது மனுவில், தனக்கு காஞ்சிபுரம் மகளிர் நீதிமன்றம் வழங்கிய சிறை தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும். ஜாமீன் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த வழக்கானது நீதிபதிகள் என்.சதீஷ்குமார், கே.ராஜசேகர் ஆகியோர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், தற்போதைய நிலையில் தண்டனையை நிறுத்தி வைக்க தகுதியான வழக்கு இது அல்ல என கூறி அவருக்கு ஜாமீன் வழங்க மறுத்து, மனுவை தள்ளுபடி செய்தனர். பிரதான மேல்முறையீட்டு வழக்கை நவம்பர் 4ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.