

திருவள்ளூர்,
திருவள்ளூர் மாவட்டம் கன்னிகைப்பேரில் செயல்பட்டு வந்த கடல் உணவுப்பொருட்கள் ஏற்றுமதி தொழிற்சாலையில் கடந்த மாதம் 21-ந்தேதி அமோனியா வாயு கசிவு ஏற்பட்டது. இதில் 18 வடமாநில பெண் தொழிலாளர்கள் உயிரிழந்தனர். பலர் பாதிக்கப்பட்டனர்.விபத்துக்கு பிறகு, தொழிற்சாலையில் இருந்த அமோனியா வாயு அகற்றும் பணி 4 நாட்கள் நடைபெற்றது.
பின்னர், மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின்பேரில் அலுவலகம், குடோன், தளவாட அறை, குடியிருப்பு உள்ளிட்ட 5 பகுதிகளுக்கு அதிகாரிகள் 'சீல்' வைத்தனர். தொழிற்சாலையில் கழிவுநீர் அகற்றும் பணியுடன், வளாகத்தில் உள்ள சுமார் 20 மரங்களை வெட்டி அகற்றும் பணியும் நடைபெற்றது.
இந்த நிலையில், அனைத்து பணிகளும் நிறைவடைந்த நிலையில், தொழிற்சாலையின் பிரதான நுழைவாயிலுக்கு அதிகாரப்பூர்வமாக இன்று 'சீல்' வைக்கப்பட்டது. திருவள்ளூர் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து ஆலைக்கு வழங்கப்பட்டு வந்த மின்சாரத்தை வருவாய்துறை அதிகாரிகள் துண்டித்தனர்.