

சென்னை,
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படையின் பயிற்சி பெற்ற ராஜி மற்றும் பாதல் ஆகிய இரு மோப்ப நாய்கள், கடந்த 2011 ஆம் ஆண்டு பாதுகாப்பு பணியில் சேர்க்கப்பட்டன. வெடி பொருட்களையும், கடத்தல் பொருட்களையும் மிகத்துல்லியமாக கண்டுபிடித்த அந்த இரண்டு மோப்ப நாய்களும் பாதுகாப்புப் படை மற்றும் விமான நிலைய அதிகாரிகளின் பாராட்டுக்களை பெற்றன.
அந்த இரு மோப்ப நாய்களும் இன்றோடு பணி ஓய்வு பெறுகின்றன. ஓய்வு பெற்ற ராஜி மற்றும் பாதல் ஆகிய இரு மோப்ப நாய்களுக்கும் மத்திய தொழில் பாதுகாப்புப் படை சார்பில் பாராட்டி வழியனுப்பும் விழா நடத்தப்பட்டது. ஆலந்தூரில் உள்ள மத்திய தொழில் பாதுகாப்புப் படை அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் சென்னை விமான நிலைய ஆணையர் சரத்குமார், மத்திய தொழில் பாதுகாப்புப் படை டி.ஐ.ஜி. ஸ்ரீராம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஓய்வு பெற்ற இரு மோப்ப நாய்களுக்கும் கேக் வெட்டியதுடன், பதக்கங்களையும், மாலைகளையும் அணிவித்து கவுரவித்த அதிகாரிகள், அந்த நாய்களுக்கு சிறந்த பணிக்கான சான்றிதழ்களையும் வழங்கினர். இரண்டு மோப்ப நாய்களையும் மத்திய தொழில் பாதுகாப்புப் படையின் வாகனத்தில் ஏற்றி, மலர்கள் தூவப்பட்டு, அந்த வாகனத்தை வீரர்கள் கயிற்றால் இழுத்து வர, மோப்ப நாய்கள் இரண்டும் கம்பீரமாக வலம் வந்தன.
ராஜி மற்றும் பாதலுக்கு பதிலாக அடுத்த 10 ஆண்டுகளுக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட தேஜஸ், ப்ரூனோ, வெற்றி ஆகிய 3 மோப்ப நாய்கள் தேர்வு செய்யப்பட்டு பணியில் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த வழியனுப்பு விழாவில் புதிய நாய்களின் அறிமுகமும், வெடி பொருட்களை கண்டுபிடிக்கும் ஒத்திகையும் நடைபெற்றது. ராஜி மற்றும் பாதல் ஆகிய 2 நாய்களும் மிக திறமை வாய்ந்தவை எனவும், பத்து ஆண்டுகளாக பணியில் இருந்த அந்த நாய்களை பிரிவது வருத்தம் அளிப்பதாகவும் அதன் பயிற்சியாளர்கள் தெரிவித்தனர்.