

புவனகிரி,
புதுச்சத்திரம் அருகே கொத்தட்டை மெயின் ரோட்டில் மருந்துக்கடை நடத்தி வரும் நபர், மருத்துவ படிப்பு படிக்காமல் நோயாளிகளுக்கு அலோபதி மருத்துவ சிகிச்சை அளிப்பதாக புதுச்சத்திரம் வட்டார மருத்துவ அலுவலருக்கு தகவல் கிடைத்தது. அதன்அடிப்படையில் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் அமுதா பெருமாள் தலைமையிலான மருத்துவ குழுவினர் தகவல் கிடைக்கப்பெற்ற மருந்துக்கடைக்கு விரைந்து சென்று அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு மருந்துக்கடை நடத்தி வரும் சின்னகுமட்டி கிராமத்தை சேர்ந்த ரமணன்(வயது 33) என்பவர், மருத்துவ படிப்பு படிக்காமலேயே அப்பகுதி மக்களுக்கு அலோபதி சிகிச்சை அளித்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து வட்டார மருத்துவ அலுவலர் அமுதா பெருமாள் இதுபற்றி பரங்கிப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து போலி டாக்டர் ரமணனை கைது செய்தனர். மேலும் மருந்துக்கடையில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்பட்ட மருத்துவ உபகரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.