கள்ளக்காதல் விவகாரம்: வாலிபரை அடித்துக்கொன்ற அண்ணன்

கள்ளக்காதல் விவகாரத்தில் வாலிபரை சொந்த அண்ணனே அடித்துக்கொலை செய்தார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

திருவள்ளூர்,

உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்த சகோதரர்கள் ராகுல்சிங் (31 வயது) மற்றும் சிவா சிங் (26 வயது). இவர்கள் இருவரும் கடந்த 5 மாதங்களாக மீஞ்சூர் அடுத்த காட்டுப்பள்ளியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஒப்பந்த தொழிலாளர்களாக பணியாற்றி வந்தனர். சமீபத்தில் தனது தங்கையின் திருமணத்திற்காக சொந்த ஊருக்கு 15 நாட்கள் விடுமுறை எடுத்துச் சென்ற சிவாசிங், திருமணம் முடிந்த கையோடு மீண்டும் காட்டுப்பள்ளியில் உள்ள தொழிலாளர் முகாமிற்கு திரும்பியுள்ளார்.

நேற்று முன்தினம் வெளியே சென்ற சிவாசிங் நீண்ட நேரமாகியும் முகாமிற்கு திரும்பவில்லை. இந்l நிலையில், நேற்று காலை முகாம் அருகே ரத்த காயங்களுடன் ஒருவர் இறந்து கிடப்பதாக முகாம் மேலாளருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக நிறுவனத்தின் மேற்பார்வையாளர் சம்பவ இடத்திற்குச் சென்று, உயிரிழந்தவர் சிவாசிங் என்பதை உறுதி செய்தார்.

ஆம்புலன்ஸ் மூலம் அவர் மீஞ்சூர் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து காட்டூர் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டதை அடுத்து, போலீசார் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சந்தேகத்தின் அடிப்படையில் உயிரிழந்த சிவாசிங்கின் அண்ணன் ராகுல்சிங்கிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது அவர், "எங்கள் ஊரில் திருமணமான ஒரு பெண்ணை சிவாசிங் காதலித்து வந்தார். இது தொடர்பாக எங்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக பேசும்போது ஆத்திரமடைந்த நான், சிவாசிங்கை அருகில் இருந்த மதில் சுவரில் பலமாக மோதினேன். அவர் அங்கேயே விழுந்துவிட, நான் முகாமிற்கு வந்து தூங்கிவிட்டேன்" என்று கூறினார்.

தம்பியை கொலை செய்ததை ராகுல்சிங் ஒப்புக்கொண்டதை அடுத்து, காட்டூர் போலீசார் அவர் மீது கொலை வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். தங்கையின் திருமணத்தை முடித்துவிட்டு மகிழ்ச்சியுடன் வேலைக்குத் திரும்பிய இளைஞர், சொந்த அண்ணனாலேயே அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் காட்டுப்பள்ளி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com