விஷம் குடித்துவிட்டு போலீஸ் நிலையத்தில் கதறிய கள்ளக்காதல் ஜோடி: கடைசியில் நடந்த சோகம்

குலசேகரன்பட்டினம் காவல் நிலையத்திற்குள் சென்ற கள்ளக்காதல் ஜோடி காப்பாற்றுங்கள் என்று போலீசாரிடம் கேட்டுள்ளது.
விஷம் குடித்துவிட்டு போலீஸ் நிலையத்தில் கதறிய கள்ளக்காதல் ஜோடி: கடைசியில் நடந்த சோகம்
Published on

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு சாலைப்புதூரைச் சேர்ந்தவர் கார்த்திகேயன். இவருடைய மகன் தங்கவேல்சாமி (வயது 28), கார் டிரைவர். இவருக்கு மனைவி மற்றும் 2 மகள்கள் உள்ளனர்.

தங்கவேல்சாமி கடந்த சில மாதங்களாக நெல்ல வண்ணார்பேட்டையில் உள்ள உறவினரின் வீட்டில் தங்கியிருந்து வேலைக்கு சென்று வந்தார்.அப்போது எதிர்வீட்டில் வசித்த ஆட்டா டிரைவர் சுப்பையா மனைவி பார்வதியுடன் (33) தங்கவேல்சாமிக்கு பழக்கம் ஏற்பட்டது. சுப்பையா-பார்வதி தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர். எனினும் பார்வதி தங்கவேல்சாமியுடன் பேசி பழகி வந்தார். நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியது.

இதனை அறிந்த இருவரது குடும்பத்தினரும் அவர்களைக் கண்டித்தனர். பார்வதி தனது வீட்டில் இருந்து வெளியேறி தங்கவேல்சாமியுடன் சென்றார். எனவே, அவர்களை குடும்பத்தினர் தேடி வந்தனர். நேற்று காலையில் தங்கவேல்சாமி குலசேகரன்பட்டினத்துக்கு காரில் பார்வதியை அழைத்து சென்றார். நாம் வீட்டுக்கு சென்றால் குடும்பத்தினர் நம்மை பிரித்து விடுவார்கள் என்று கருதிய இருவரும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார்கள். அதன்படி தங்கவேல்சாமி, பார்வதி ஆகியோர் பூச்சிக்கொல்லி மருந்தை (விஷம்) குடித்தனர்.

இதனால் வாயில் நுரை தள்ளியவாறு உயிருக்கு போராடிய அவர்கள் குலசேகரன்பட்டினம் போலீஸ் நிலையத்துக்கு காரில் சென்றனர். போலீஸ் நிலையத்துக்கு வெளியில் காரை நிறுத்திய அவர்கள் 2 பேரும் நாங்கள் விஷம் குடித்து விட்டோம், எங்களைக் காப்பாற்றுங்கள் என்று கதறியவாறு போலீஸ் நிலையத்துக்குள் சென்றனர்.

உடனே அங்கிருந்த போலீசார் அதிர்ச்சி அடைந்து 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக குலசேகரன்பட்டினம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்து சென்றனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே தங்கவேல்சாமி, பார்வதி ஆகிய 2 பேரும் அடுத்தடுத்து பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து குலசேகரன்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com