போலி நீட் மதிப்பெண் சான்றிதழ் வழக்கு: தலைமறைவாக இருந்த மாணவி கைது - பரபரப்பு வாக்குமூலம்

போலி நீட் மதிப்பெண் சான்றிதழ் வழக்கில் போலீஸ் தேடிய மாணவி நேற்று அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
போலி நீட் மதிப்பெண் சான்றிதழ் வழக்கு: தலைமறைவாக இருந்த மாணவி கைது - பரபரப்பு வாக்குமூலம்
Published on

சென்னை,

போலி நீட் மதிப்பெண் சான்றிதழ் வழக்கில் போலீஸ் தேடிய மாணவி நேற்று அதிரடியாக கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார். போலி சான்றிதழ் தயாரித்தது எப்படி? என்று அவர் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

சென்னை நேரு விளையாட்டரங்கில் நடைபெற்ற மருத்துவ கலந்தாய்வில் போலி நீட் மதிப்பெண் சான்றிதழுடன் மாணவி தீக்ஷா (வயது 18) என்பவர் கலந்து கொண்டார். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்த அந்த மாணவியின் தந்தையின் பெயர் பாலச்சந்திரன். பல் டாக்டரான இவர் தனது மகள் தீக்ஷாவுடன், மருத்துவ கலந்தாய்வில் பங்கேற்றார். அப்போது அவர் தாக்கல் செய்த நீட் தேர்வு மதிப்பெண் சான்றிதழ் போலியானது என்று கண்டறியப்பட்டது. அந்த மாணவி நீட் தேர்வில் பெற்ற உண்மையான மதிப்பெண் 27. ஆனால் மருத்துவ கலந்தாய்வில் சமர்ப்பித்த சான்றிதழில் 610 மதிப்பெண்கள் பெற்றதாக கூறப்பட்டிருந்தது.

ஒரு கம்ப்யூட்டர் மையம் மூலமாக 610 மதிப்பெண் பெற்ற இன்னொரு மாணவியின் சான்றிதழில் பெயர் மற்றும் புகைப்படத்தை மாற்றி போலி சான்றிதழ் தயாரித்துள்ளனர். மாணவி தீக்ஷா மற்றும் அவரது தந்தை மீது சென்னை பெரியமேடு போலீசில் மருத்துவ கலந்தாய்வு குழு தலைவர் செல்வராஜ் புகார் கொடுத்தார்.அதன் அடிப்படையில் பெரியமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபு 6 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தார். மாணவியின் தந்தை டாக்டர் பாலச்சந்திரன் கைது செய்யப்பட்டார். அவரிடம் 3 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரணை நடத்தப்பட்டது. விசாரணை முடிந்து மீண்டும் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

போலீஸ் காவல் விசாரணையின் போது, மாணவி தீக்ஷாவின் லேப்டாப் மற்றும் செல்போன் கைப்பற்றப்பட்டது. அவற்றை போலீசார் தடயவியல் துறையினரிடம் ஒப்படைத்தனர். தலைமறைவான மாணவி தீக்ஷாவை போலீசார் தொடர்ந்து தேடி வந்தனர்.

இந்த நிலையில் நேற்று மாணவி தீக்ஷா சென்னையில் உள்ள லாட்ஜில் வைத்து கைது செய்யப்பட்டதாகவும், அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு 15 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறைக்கு அனுப்பப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர். மாணவியை கோர்ட்டில் ஆஜர்படுத்த போலீசார் அழைத்து சென்றபோது, அவரது முகத்தை மூடி அழைத்து சென்றனர்.

போலி நீட் மதிப்பெண் சான்றிதழ் தயாரித்தது எப்படி? என்று மாணவி தீக்ஷா நடித்து காட்டியதாகவும், அது பற்றி பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளதாகவும் போலீசார் கூறினார்கள். மாணவி தீக்ஷா தனது செல்போன் மூலமாக போலி சான்றிதழ் தயாரித்ததாக தனது வாக்குமூலத்தில் குறிப்பிட்டுள்ளார் என்றும் போலீசார் தெரிவித்தனர். மாணவியின் செல்போன் ஏற்கனவே போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com