சென்னையில் ரூ.1.73 லட்சம் மதிப்புள்ள போலி பெயிண்ட்கள் பறிமுதல்: 3 பேர் கைது

சென்னை அறிவுசார் சொத்துரிமை அமலாக்கப் பிரிவினர் அய்யப்பன்தாங்கல் தண்டலம் பகுதியில் சோதனை நடத்தினர்.
சந்தையில் முன்னணி பிராண்டுகளின் பெயரில் போலி தயாரிப்புகளை தயாரித்து விற்பனை செய்பவர்களை கண்காணித்து புகார் செய்யும் தனியார் நிறுவனமான புதுடெல்லியில் உள்ள SGS IPR CONSULTANCY-யின் உதவி மேலாளர் தம்புசாமி என்பவர், சென்னை அறிவுசார் சொத்துரிமை அமலாக்கப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் ஒரு முன்னணி பெயிண்ட் நிறுவனத்தின் பிராண்டுகளை போல போலியான பெயிண்ட்களை தயாரித்து விற்பனை செய்வது குறித்து புகார் அளித்தார்.
அதன்பேரில் சென்னை அறிவுசார் சொத்துரிமை அமலாக்கப் பிரிவினர் அய்யப்பன்தாங்கல் தண்டலம் பகுதியில் சோதனை நடத்தினர். சோதனையில் அதே பகுதியைச் சேர்ந்த பால்பாண்டி, ஆரோக்கியசாமி மற்றும் சரவணன் ஆகியோர் போலி தயாரிப்புகளை விற்பனை செய்து வருவது கண்டறியப்பட்டது. விசாரணையில் 3 பேரும் விலை மலிவான போலியான பெயிண்டுகளை வாங்கி அதை ஒரு முன்னணி பெயிண்ட் நிறுவனத்தின் பெயர் கொண்ட பக்கெட்டில் அடைத்து விற்பனையில் ஈடுபட்டு வந்தது கண்டறியப்பட்டது. இதுதொடர்பாக சென்னை அறிவுசார் சொத்துரிமை அமலாக்கப் பிரிவினர் மேற்சொன்ன 3 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து ரூ.1 லட்சத்து 73 ஆயிரம் மதிப்புள்ள போலி பெயிண்ட் பக்கெட்டுகளை பறிமுதல் செய்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்தனர்.
அமலாக்கப்பணியகம் கூடுதல் டிஜிபி அமல்ராஜ், குற்றப்பிரிவு ஐஜி செந்தில்குமாரி மற்றும் அறிவுசார் சொத்துரிமை அமலாக்கப்பிரிவு எஸ்.பி. சாம்சன் ஆகியோர் சென்னை அறிவுசார் சொத்துரிமை அமலாக்கப்பிரிவின் விரைவான நடவடிக்கைக்கு பாராட்டு தெரிவித்தனர். மேலும் போலி பொருட்களின் உற்பத்தி மற்றும் விற்பனை குறித்த தகவல்களை spiprec@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலோ அல்லது 044-28511587 என்ற தொலைபேசி எண்ணிலோ தெரிவிக்குமாறு பொது மக்களை கேட்டுக்கொண்டனர்.






