போலி பாஸ்போர்ட் வழக்கு: 5 போலீசார் உள்பட 50-க்கும் மேற்பட்டோருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

போலி பாஸ்போர்ட் வழக்கு: 5 போலீசார் உள்பட 50-க்கும் மேற்பட்டோருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

50-க்கும் மேற்பட்டோருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
Published on

சென்னை,

ஐ.பி.எஸ். அதிகாரி டேவிட்சன் தேவாசீர்வாதம் மதுரை மாநகர காவல் ஆணையராக பதவி வகித்த காலத்தில் 200-க்கும் மேற்பட்டோருக்கு போலி ஆவணங்கள் மூலம் பாஸ்போர்ட் வழங்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளதாகவும், இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்றும் கோரி வராகி என்பவர் சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா, நீதிபதி அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கில் ஐ.பி.எஸ். அதிகாரி டேவிட்சனுக்கு தொடர்பு இல்லை என மதுரை ஐகோர்ட்டு கிளையின் உத்தரவில் கூறப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும் மதுரை ஐகோர்ட்டு கிளை பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் 5 போலீசார் உள்பட 50-க்கும் மேற்பட்டோருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, அவர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனிடையே, மதுரை ஐகோர்ட்டு கிளை தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை 2 நீதிபதிகள் அமர்வும் உறுதி செய்துள்ள நிலையில், இந்த மனு மீது எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என்று தெரிவித்த நீதிபதிகள், விசாரணை நீதிமன்றத்தில் ஐ.பி.எஸ். அதிகாரி டேவிட்சனுக்கு எதிராக விசாரணை நடத்தக்கோரி மனுத்தாக்கல் செய்யலாம் என மனுதாரர் தரப்புக்கு அறிவுறுத்தி, இந்த வழக்கின் விசாரணையை அக்டோபர் 7-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.  

X

Daily Thanthi
www.dailythanthi.com