போலி பேராசிரியர்கள் விவகாரம்: 900 பேராசிரியர்களுக்கு வாழ்நாள் தடை

295 தனியார் என்ஜினீயரிங் கல்லூரிகள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
போலி பேராசிரியர்கள் விவகாரம்: 900 பேராசிரியர்களுக்கு வாழ்நாள் தடை
Published on

சென்னை,

போலி பேராசிரியர்கள் விவகாரத்தில் தொடர்புடைய 900 பேராசிரியர்களுக்கு வாழ்நாள் தடை விதிக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் வரும் என்ஜினீயரிங் கல்லூரிகளில் பேராசிரியர்கள் முறைகேடாக பணியில் சேர்ந்ததாக தனியார் அமைப்பு ஒன்று வெட்ட வெளிச்சத்துக்கு கொண்டு வந்தது. இதையடுத்து அண்ணா பல்கலைக்கழகம் இதில் தீவிரம் காட்டியது. பேராசிரியர்கள் விவரங்களை பார்த்து அதில் போலியாக, முறைகேடாக சேர்ந்தவர்கள் விவரங்களை சேகரித்தது.

இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்த நிலையில், இதற்காக 3 பேர் கொண்ட குழுவும் அமைக்கப்பட்டது. அந்த குழு அறிக்கை தாக்கல் செய்ய உள்ளது. இதற்கிடையில், அண்ணா பல்கலைக்கழக சிண்டிகேட் கூட்டத்தில் இந்த விவகாரம் தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு இருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன.

போலி பேராசிரியர்கள் விவகாரத்தில் தொடர்புடையதாக கருதப்படும் 295 தனியார் என்ஜினீயரிங் கல்லூரிகள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கவும், சம்பந்தப்பட்ட சுமார் 900 பேராசிரியர்களுக்கு வாழ்நாள் தடை விதிக்கவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக சொல்லப்படுகிறது. இதற்கு சிண்டிகேட் நிர்வாகிகள் ஒப்புதல் அளித்திருப்பதாக கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com